ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டில் 2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் உள்நாட்டு மீன் பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் மீன்வளத்துறை மூலமாக குளம், ஆறு உள்ளிட்ட பகுதிகளில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டு பகுதியில் உள்ள ஆற்றில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி மீன்வளத்துறை மூலமாக நடந்தது. இதில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு தாமிரபரணி ஆற்றில் சுமார் 2 லட்சம் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் வகையில் ஆற்றில் விட்டனர் மேலும் கூண்டுகளில் வைத்து மீன் வளர்ப்பவர்களுக்கு பணி ஆணைகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


