தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ஆர்.சி.தெருவைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் சூர்யா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஜெய் உதயன் என்ற ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறந்து 49 நாட்கள் ஆகிறது.
நேற்று செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார்குளம்பட்டியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. இதில் சூர்யாவின் தாயார் வசந்தி ஜெய் உதயனை தடுப்பூசி போட கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் ஜெய் உதயன் மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே ஜெய் உதயனை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அதிகாலை 5.10 மணி அளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தை இறந்ததற்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டதே காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையின் உடல் உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவனையில் உள்ளது. உடல்கூறு ஆய்வு முடிந்த பின்னர் தான் இதுகுறித்த முழு விபரம் தெரியவரும் என்று தெரிகிறது.


