ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரனார் மாவட்டம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நிர்வாக சீர்திருத்த காரணங்களுக்காக தூத்துக்குடி மாவட்டமானது சிதம்பரனார் மாவட்டத்திலிருந்து 1986ம் ஆண்டு அக்டோபர்20ஆம் நாள் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பிரிக்கப்பட்டு தற்போது 36 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள், பெண் ஊழியர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தாலுகா அலுவலகம் முன்பு தூத்துக்குடி மாவட்டம் குறித்த வாசகங்கள் அடங்கிய வண்ணக் கோலமிட்டு மகிழ்ந்தனர்.
பின்னர் தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் தங்கையா தலைமையிலான அதிகாரிகள் கேக் வெட்டி தூத்துக்குடி மாவட்டம் உதயமான தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தூய்மை பணிகள் நடந்தது. மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இன்றைய தினம் சிறப்பு மனு நாளாக அனுசரிக்கப்பட்டு இன்று பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு அடுத்த 14 நாட்களுக்குள் உரிய தீர்வு வழங்கப்படும் என சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தெரிவித்துள்ளார்.


