தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மக்காச்சோள பயிரை படைப்புழுக்கள் இரவு நேரத்தில் அதிகமாக சேதப்படுத்தும். இளம் குருத்துக்களில் சேதம் விளைவிப்பதால் இலைகள் விரிவடையும்போது வரிசையான சிறிய மற்றும் பெரிய வட்ட வடிவ அல்லது வடிவமற்ற துவாரங்கள் தென்படும். மேலும் கதிர்கள் உருவானதற்கு பின் படைப்புழுக்கள் கதிரின் மேல் உள்ள உரைகளையும், மணிகளையும் சேதப்படுத்துகிறது. இதனை அழிக்க ஆழமான கோடை உழவு செய்து மண்ணில் உள்ள கூட்டு புழுக்களை அளிக்கலாம். வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ கடைசி உழவில் இடவேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி சையாண்டிரினிலிபுரோல் 19.8 சதவீதமும், தையோமீத்தாக்சம் 19.8% கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். சரியான பருவத்தில் ஒரே நேரத்தில் விதைப்பு செய்ய வேண்டும். பயிர் இடைவெளி இரவை மக்காச்சோளத்தில் 60க்கு 25 சென்டிமீட்டர் மானாவாரி மக்காச்சோளத்தில் 45க்கு 20 சென்டிமீட்டர் பராமரிப்பது அவசியமாகும்.
மேலும் ஒவ்வொரு பத்து வரிசைக்கும் ஒரு வரிசை 75 சென்டிமீட்டர் இடைவெளி விட வேண்டும். மானாவாரி பகுதிகளில் பயிரை சுற்றிலும் நான்கு வரிசை வரப்பு பயிராக நாற்று சோளமும், தோட்டக்கால் பகுதிகளில் நான்கு வரிசை தட்டைப்பயிறு, துவரை, சூரியகாந்தி, மற்றும் எள் ஆகியவற்றிலும் ஏதேனும் ஒன்றை நெருக்கமாக பயிரிடும்போது தாய் அந்து பூச்சிகள் வரப்பு பயிரிலே முட்டையிடுவதால் படைப்புழுக்கள் தாக்குதல் குறையும். தோட்டக்கால் பயிர்களில் ஊடுபயிராக உளுந்து அல்லது பாசிப்பயிறு சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் பயிர் விதைத்த ஒரு வாரம் முதல் வயல் முழுவதும் நடந்து கண்காணித்து இலையில் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டை கோயில்கள் மற்றும் இளம் புழுக்களை கையால் சேகரித்து அளிக்க வேண்டும். இனக்கவர்ச்சி பொறிகள் ஏக்கருக்கு ஐந்து எண்கள் வைத்து தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கவனிக்க வேண்டும்.
முன் குருத்து பருவம் 15 முதல் 20 நாட்களில் குளோராண்டிரினிலிபுரோல் 18.5 எஸ்சி நாலு மில்லி அல்லது ப்ளூபெண்டியாமைட்-480 எஸ்சி 5 மில்லி அல்லது அசாடிராக்டின் 1500 பிபிஎம் 50 மில்லி ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்க வேண்டும். மேலும் இளம் குருத்து பருவத்தில் 80 கிராம் மெட்ராஸியம் அனிசோவிலே மருந்தினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி மருந்தை செடியின் குருத்துப் பகுதியை நோக்கி தெளிக்க வேண்டும்.
ஒரு முறை உபயோகித்த பூச்சி மருந்தை மீண்டும் உபயோகிக்க கூடாது பரிந்துரை இல்லாத ரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


