காக்காச்சி மலையை கடந்து எங்கள் வாகனம் சென்றது. எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டம் தான். பச்சை பசேலேன்று அதைப்பார்த்துக்கொண்டே எங்கள் கார் சென்றது. தொடர்ந்து மிகப்பெரிய புல் வெளி வந்தது.
புல் வெளியில் பரந்தவெளியில் மிகப்பிரமாண்டான மேக கூட்டங்கள் மத்தியல் அந்த இடம் மிகச்சிறப்பாக, தேவலோகமாக விளங்கியது. அதை பார்த்துக்கொண்டே செல்லும் போது சிறிது நேரத்தில் மணிமுத்தாறு பாலம் வந்தது. இந்தபாலம் சிறிது காலத்துக்கு முன்பு மரப்பாலமாக இருந்து தற்போது இரும்பு பாலமாக மாறி விட்டது. என்றார்கள். அதன் அருகில் பர்மா கம்பேனி காரர்கள் மணிமுத்தாறு எஸ்டேட் என பெயர் பலகை வைத்து இருந்தார்கள். தொடர்ந்து எங்கள் பயணம் கிளம்பியது.
அதன் பின்பு நாலு முக்கு என்ற இடத்துக்கு வந்தோம். இந்த இடத்திலும் தபால் அலுவலகம் , வனத்துறை அலுவலம் மற்றும் எஸ்டேட் அலுவலகம் என இருந்தது. இந்த இடத்தில் நாலு முக்கு சந்திக்கும் இடமாக இருந்தது. எனவே தான் இந்த இடத்திறகு நாலு முக்கு என்று பெயர் வந்தது. ஒரு பகுதி கோதையாறுக்கு சென்றது. மற்றொரு பகுதி ஊத்து மற்றும் குதிரை வெட்டிக்கு சென்றது. இன்னொரு பாதை கீழே இருந்து வந்தது. மற்றொரு வழி குடியிருப்புக்கு சென்றது.
மாமரங்கள் அதிகம் இருப்பதால் “மாஞ்சோலை எஸ்டேட்” என்றும், காகம் பறக்காத மலைப்பகுதி என்பதால் “காக்காச்சி எஸ்டேட்” என்றும், பப்பன் கங்காணி முக்கு, பத்தாம் காடு முக்கு, மாட்டுப்பட்டி முக்கு, மேல்பிரட்டு முக்கு என நான்குபுறமும் எல்லைகள் கொண்டதால் “நாலுமுக்கு எஸ்டேட்” என்றும், பார்க்கும் இடமெல்லாம் தண்ணீர் ஊற்றாய் வருவதால் “ஊத்து எஸ்டேட்” என்றும், திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் குதிரையை கட்டிப் போடும் இடம் நாளடைவில் “குதிரைவெட்டி” என்றும் அழைக்கப்படுகிறது
அவ்விடத்தில் இறங்கினோம்.
அங்குள்ள டீக்கடையில் கட்டஞ்சாயா குடித்தோம்.
மதிய சாப்பாடு வேண்டும் என்று இங்கே ஆடர் கொடுத்திருந்தால், இங்கே சாப்பிடலாம். ஆனால் நாங்கள் ஆடர் செய்யவில்லை.
நாங்கள் இருமனதாகவே இருந்தோம். ஏன் என்றால் ஏற்கனவே மிகவும் தாமதமாகி விட்டோம். மாலை 6 மணிக்குள் கீழே இறங்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அருவியில் குளிக்கவேண்டும் என நினைத்தப்படியே நாலுமுக்கோடு பயணத்தினை முடிததுவிடலாம் என நினைத்தோம்.
ஆனால் சங்கரபாண்டியன் விட வில்லை. குதிரை வெட்டி கண்டிப்பாக போக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். அவர் பிடிவாதம் எங்களுக்கும் ஊத்து மற்றும் குதிரைவெட்டியை பார்க்கவேண்டும் என ஆர்வம் பிறந்தது.
எனவே தொடர்ந்து பயணம் ஆரம்பித்தது.
தொடர்ந்து ஊத்துபகுதிக்கு வந்து சேர்ந்தோம். ஊத்து எஸ்டேட் தனிப்பிரிவாக இருந்தது. நுழையும் போதே தேயிலைத்தோட்டங்களும் அங்கே தேயிலை தொழில் சாலையும் அடுத்து குடியிருப்பும் இருந்தது.
அரசு பேருந்து திரும்பும் வகையில் இடமும், அதை சுற்றி பஜார் போன்ற அமைப்பும் இருந்தது. அங்கே ஓட்டலும் இருந்தது.
நாங்கள் இறங்கி சென்று அந்த இடத்தில் நின்று படம் எடுத்துக்கொண்டோம். தொடர்ந்து அங்குள்ள இரண்டு ஓட்டலை பார்த்தோம். ஓட்டல் முன்பு மரத்தாலான ஒரு சாய்வு பெஞ்ச் போட்டிருந்தார்கள். அந்த பெஞ்சில் அமர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தோம். அதன் பின் தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் ஆரோக்கிய சாமியிடம் முத்து பாண்டியன் சாப்பாடு ஆடர் கொடுத்தார்.
அவர் ஒரு அரை மணி நேரம் கழித்து வாருங்கள் உங்களுக்கு சாப்பாடு தயாராகிவிடும் என்று கூறி விட்டார்.
உடனே நாங்கள் குதிரை வெட்டி செல்லும் பாதை வழியாக அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்கு வந்தோம்.
குடியிருப்புககு மேல் தேயிலை எஸ்டேட், அதன் மீது மேக கூட்டம் என வர்ணஜாலம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்து நாங்கள் பல படங்கள் எடுத்தோம். தொடர்ந்து சிறிது நேரம் அங்கே நேரத்தினை போக்கி விட்டு மைனா ஓட்டலுக்கு வந்தோம்.
அங்கே சுவையான சிக்கன் உணவு தயாராக இருந்தது. எங்களுக்கு செய்த உணவை அப்படியே கொண்டு வைத்தார்கள். அளவு சாப்பாடு எல்லாம் கிடையாது. எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம் . கோழி குழம்பு எங்களுக்கு ஆக்கியது எங்களுக்கே . எனவே அனைவரும் அமர்ந்து அருமையான சாப்பாடு சாப்பிட்டோம்.
மிக சுவையாக இருந்தது. எப்போவது மாஞ்சோலை சென்றால் நீங்கள் 9489156052 என்ற எண்ணிற்கு தொடர்ப்பு கொண்டு உணவு வேண்டும் என்று கூறினால் போதும் உங்களுக்கு உணவு தயாராகி விடும். ஆனால் முன்பு பதிவு அவசியம். அதோடு மட்டுமல்லாமல் சாப்பாடு முன்பதிவு செய்தால் கண்டிப்பாக சாப்பிட வந்து விடவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு நஷ்டமாகி விடும்.
மாஞ்சோலையை பற்றி இந்த இடத்தில் மேலும் சில சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் முழுமையாக பினேகாஸ் எழுதிய மனசெல்லாம் மாஞ்சோலை என்ற புத்தகத்தினை படிப்பது அவசியம் . இதை போல் இன்றொரு புத்தகம் மாஞ்சோலையை பற்றி முழுமையாக வருவதற்கு வாய்ப்பில்லை. இந்த புத்தகத்தினை வாங்க நீங்கள் 9894073806 என்ற எண்ணில் தொடர்பு கொள்வது அவசியமாகும்.
அதை படித்து விட்டால் மாஞ்சோலையின் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாக ரசித்து விடலாம்.
மாஞ்சோலை பல வண்ணப் பறவைகளின் சரணாலயம். இங்கு அரிதினும் அரிதான சின்ன அரிவாள் மூக்கன், சாம்பல் இருவாச்சி, தாட்டு கீச்சான் குருவி, மஞ் சள் தொண்டை சின்னான், செம்மீசை சின்னான், செந்தலை பஞ்சுருட்டான் குருவி, பெரிய பொன்முதுகு மரங்கொத்தி, செம்மார்புக் குக்குறுவான் குருவி, கரிச்சான் குருவி, காட்டுக்கோழி போன்ற பறவையினங்கள் உள்ளன.
வனவிலங்குகளான யானை, சிறுத்தை, புலி, கரடி, சருகுமான், புள்ளிமான், மிளா, காட்டுப்பன்றி, காட்டுமாடு, செந்நாய், முள்ளம்பன்றி, மலைப்பாம்பு, நாகப்பாம்பு, கொம்பேறி மூக்கன், கண்ணாடி விரியன், ராஜநாகம், மலை அணில், மந்தி போன்றவையும், பெரிய வெட்டுக்கிளி, பச்சோந்தி, உடும்பு மற்றும் பல வண்ணங்கள் கொண்ட ஓணான் போன்றவையும் உள்ளன. சிங்கவால் குரங்குகள் அதிகம் இருக்கும் இடம் மாஞ்சோலை எஸ்டேட் என்ற ஒரு தனிச்சிறப்பும் உண்டு. சிறுத்தை வகைகளான பெரிய தலையையும் தாடையையும் கொண்ட ஜாகுவார் இனமும், சிறிய கால்களும், பெரிய மண்டையோடும் கொண்ட லெப்பர்டும், சிறிய முகத்தையும் பெரிய வாலையும் கொண்ட சீட்டா போன்ற இனங்களும் உள்ளன.
அதே போல ஒவ்வொரு வீடுகளுக்கு அருகிலும் டாலியா, செவ்வந்தி, கேந்தி, இட்லி பூ (வெட்சி), கல்வாழை, காட்டுரோஜா, ஊமத்தம், உன்னி, செம்பருத்தி, குடசம், தளவம், அனிச்சம், சிசிலி, வஞ்சி இப்படி பலவகையான பூக்கள் மற்றும் அனைத்து நிற ரோஜாக்களும் மாஞ்சோலையை வண்ணமயமாக்குகிறது.
ஆளரவமற்ற அமைதியான பள்ளத்தாக்குகள், பசுமைப் புல்வெளிகள், அருவிகள், ஆறுகள், ஓடைகள் என மாஞ்சோலை மொத்தமும் இயற்கையை விரும்பும், ரசிக்கும் பயணிகளுக்கான சொர்க்கமாக உள்ளது. மாஞ்சோலை பகுதியில் ஆண்டின் பெரும்பகுதி நாட்களில் அடைமழை பெய்கிறது. மலையில் கொட்டுகிறதெல்லாம் அருவிகளாகவும், ஓடைகளாகவும் பெருகி வரும். அந்த மழைத் தண்ணீர் வீணாகிவிடக் கூடாது என்ற திட்டமிடலின் விளைவு தான் அடிவாரத்தில் இருக்கிற மணிமுத்தாறு அணை.
பிடித்தமான தேநீராக உருமாறி, வானுயர்ந்த மரமாக வளரவேண்டிய தேயிலை மரம் மாஞ்சோலையிலும் வெட்டப்பட்டு பிடித்தமான தேநீராக உருமாறி, வானுயர்ந்த மரமாக வளரவேண்டிய தேயிலை மரம் மாஞ்சோலையிலும் வெட்டப்பட்டு குறுஞ்செடியாக நிற்கிறது.
இளந்தேயிலையில் மஞ்சள் நிற மகரந்தங்களை தாங்கிய சிறிய வெள்ளை நிற பூ பூக்கும். அதில் தேனீ, செந்தளை பூச்சிகள் தேனருந்தும் அழகே தனி. தேயிலை செடிகளின் மேல்பகுதியில் கோலிக்குண்டு சைசில் தேயிலைக்கொட்டைகள் கொத்து கொத்தாக தொங்கும். பச்சை கொட்டையை உடைத்தால் உள்ளே தேங்காயைப் போல பருப்பும். சுவையான தண்ணீரும் இருக்கும். காசு கொடுத்து கோலிக்குண்டை வாங்கி விளையாட முடியாத இங்குள்ள சிறுவர்களுககு அதன் வடிவில் இருக்கும் தேயிலைக் கொட்டைகள் தான் சின்ன வயதில் ஒரே ஆறுதல்.
தொழிலாளர்கள் ஒருமுறை முழுமையாக கவாத்து செய்துவிட்டு அடுத்த காடுகளில், தேயிலை பறித்து முடிப்பதற்குள் அழகிய இளந்தளிர்களை பிரசவித்து விடுவதுதான் தேயிலை செடியின் பிரமாண்டம். மாஞ்சோலை தொழிலாளர்களோடு உறவாடிப்பழகி அவர்களது கத்தரி மிஷின் சொல்லுகிறபடியெல்லாம் தன் இளந்தளிரின் தலைப்பகுதியை பிடிவாதமில்லாமல் கொடுக்கும் தேயிலைச் செடிகள். மாஞ்சோலைத் தேயிலைக்காடுகள். தேயிலைச் செடிகள் அளவுக்கு இல்லையென்றாலும் மாஞ்சோலையில் கொஞ்சமாக காப்பிச்செடியும் ஏலக்காயும், குறுமிளகும் விளைவிக்கப்படுகிறது.
சீசன் சமயத்தில் எல்லோர் வீட்டிலும் காப்பிக்கொட்டைகளையும் ஏலக்காய்களையும் குத்தகை எடுத்த மேஸ்திரிகளிடமிருந்து வாங்கி குமித்து அதிலுள்ள காம்புகளை கைவலிக்கப் பறித்து கொஞ்சம் செலவுக்கு காசு பார்ப்பார்கள் தொழிலாளர்கள். அப்போது வீடு முழுக்க ஏலக்காய் வாசம் சும்மா ஆளைத்தூக்கும்.
இந்தப் பணப்பயிர்களை மட்டுமல்லாமல் பலவகையான மரங்களையும், கனிகளையும், பூக்களையும் தனக்குள் தாராளமாய் வைத்திருக்கும் பல்லுயிர் நேசம்தான் மாஞ்சோலை.
எஸ்டேட்டில் மிக அரிதான வகையைச் சேர்ந்த சந்தன அகில்மரம், இரயில்வே பாலம் கட்ட உதவும் நாங்குமரம், விலையுயர்ந்த தோதகத்தி மரம், மிகப்பெரிதான புன்னை மரம், ஜாதிக்காய்களை அள்ளித்தரும் சோரப்பேன் மரம், அதிமருத்துவம் கொண்ட மலைவேம்பு, இனிப்பும் புளிப்பும் இணைந்த சுவைகொண்ட பெரிய காய்களை கொடுக்கும் நார்த்தங்காய், தன் உடல் முழுக்க நறுமணத்தை அப்பிக் கொண்டிருக்கும் சாம்பிராணி மரம், அழுக்கு மஞ்சள் நிறத்தில் பெரிய சைசில் இருக்கும் கடுக்காய் மரம், கருப்பும் சிவப்பும் கலந்த திராவிடக்கலரைக் கொண்டிருக்கும் செங்குறிஞ்சி மரம், மிக கட்டியான தண்ணீரில் போட்டவுடனேயே மூழ்கிவிடும் காரை மரம், சீக்கிரம் உளுத்துப் போகாத இலுப்பை மரம், அலமாரி செய்வதற்கு பயன்படும் நீண்டு வளர்ந்த பாலோடி மரம், கிறிஸ்மஸ் மரம் என்றழைக்கப்படும் காட்டு சவுக்கு மரம், புல்லாங்குழலை படைக்கிற மூங்கில், ஈத்தை, பொன் ஈத்தை மரங்கள், மிக மிக குண்டுடையனாக இருக்கும் மிளாசதை மரம், மூத்திரக்காய் என்று எஸ்டேட் மக்களால் அழைக்கப்படும் நீர்ப்பீச்சும் மலர்களைக் கொண்ட ஆப்பிரிக்க டுலிப் மரம், ஜாடி நிறைய ஊறுகாய் தரும் காட்டு நெல்லி மரம், மலை அணில்களும் குயில்களும் படைசூழ அமைந்திருக்கும் அத்திமரம், திருமண வீடுகளை அலங்கரிக்கும் சளம்பனை மரம், தித்திக்கும் கருஞ்சிவப்பு பழங்கள் தரும் காட்டு நாவல் மரம், பழம் சிறியதாக இருந்தாலும் அதிஅற்புதமான சுவை கொண்ட மாமரங்கள் போன்றவை மாஞ்சோலைக்கே உரித்தான இயற்கை வார்ப்புகள்.
கணக்கிலடங்காத மருத்துவ குணங்களை தன் மடியெங்கும் கொண்டிருக்கிறது மாஞ்சோலை. உருண்டை, நீளம் என இரண்டு வகைகளில் திப்பிலி கொடியும், பெரிய வகையிலான கடுக்காயும், குறுமிளகு, வால்மிளகு என்ற காரம் அதிகமுள்ள மிளகு வகைகளும், ஆறாத புண்களை சீக்கிரம் குணமாக்கும் கழற்சிக்காயும் மாஞ்சோலைக்கே உரித்தான மகத்துவங்கள்.
சரி. குதிரை வெட்டிக்கு செல்லலாம் என்றால் நேரம் காணாது. இதனால் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நண்பர்களே மாஞ்சோலை வர வேண்டும் என்றால் திட்டமிட்டுவாருங்கள். நான் ஏற்கனவே கூறியபடி, நல்ல கார், பெட்ரோல் டாங்கில் புல் செய்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் குதிரை வெட்டியில் தங்க வனத்துறையிடம் அனுமதி பெற்று வாருங்கள். அப்போது தான் மாஞ்சோலை உள்பட அனைத்து எஸ்டேட்களையும் அருமையாக காணமுடியும். இல்லையென்றால் எங்களை போல பரபரவென்று வந்து எதையும் கண்டும் காணாமலும் தான் செல்ல முடியும். எனவே கண்டிப்பாக திட்டமிட்டு வாருங்கள். மாஞ்சோலை எஸ்டேட் தனது 99 வருட குத்தகையை முடித்து விட்டது. நமது வாழ்நாளில், நமது கண் முன்பே வனத்துறை மாஞ்சோலையை முழுவதும் காப்பற்றி காப்பு காடாக மாற்றி விட்டால், அதன் பிறகு மிகப்பெரிய சுற்றுலா தலம் ஒன்றை நெல்லை மாவட்டம் இழக்க நேரிடும். நிறைய தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும். தாங்கள் தினமும் நேசித்து வந்த இந்த வனப்புகளை மறக்கவேண்டியது இருக்கும். எனவே அரசு அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறை காப்புக்காடு என்ற பெயரில் பலர் கனவுகளை கலைத்து விடக்கூடாது.
தொடர்ந்து மாஞ்சோலையை பிரிய மனமில்லாமல் கிளம்பினோம். இறங்கும் போது மீண்டும் மாஞ்சோலையில் ஒரு கட்டஞ்சாயா சாப்பிட்டு விட்டு, அருகில் முட்டை ரஸ்க் வாங்கி கொண்டு திரும்பினோம். மாஞ்சோலை தேயிலையை செக்போஸ்டில் சங்கரபாண்டியன் வாங்கி கொள்ள, கீழே வந்து மணிமுத்தாறு அருவியில் ஒரு குளியலை போட்டு விட்டு கிளம்பினோம். மறக்க முடியாத பயணம். மக்கள் மறந்து விடாத பயணம், மாஞ்சோலை பயணம். பல நாள் எங்கள் மனதுக்குள் மாஞ்சோலை நிறைந்து இருந்தது.
தொடர்ந்து பொருநையில் மற்றுமொரு தகவலுடன் பயணிப்போம்.
(பொருநை ரகசியங்களை தேடி பயணிப்போம்)


