தமிழகம் முழுவதும் வருகின்ற காலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதற்காக ஆங்காங்கே பருவ மழை தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கும் மேல் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மாலை 5 மணி அளவில் சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான தட்டார்மடம், முதலூர், பேய்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாத்தான்குளத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதற்கிடையில் சாத்தான்குளத்தில் உள்ள நூலகத்திற்குள் மழைநீர் சென்றது. நூலகத்தில் வாசகர்கள் படிக்கும் அறையில் மழை நீர் முழுவதும் சென்றது. இதனால் வாசகர்கள் பெரும் அவதி அடைந்தனர்.


