கோபாலகிருஷ்ணன் தோரணமலையில் இருந்து வாகனம் வரட்டும் என காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அப்பாவியாக நின்று கொண்டிருந்த சந்திரனிடம் “பனை தொழிலாளிகள் வீடு பற்றி எரியும் என்று சொன்னோனே அதற்கு காரணம் உண்டு”. என்றார்.
ஆனால் சந்திரனுக்கு அது எல்லாம பெரிதாக தோன்றவே இல்லை. அவனுக்கு அவனது பூர்வீகம் தெரியவேண்டும். அதுவும் இந்த ஊருக்கும் தனக்கும் உண்டான உறவு தெரியவேண்டும். அது மட்டுமா நம்மை சாதி மாறி திருமணம் முடித்த குடும்பம் என்கிறார்கள். அது தான் என்ன? அதைப்பற்றி தெரிய வேண்டும்.
கோபாலகிருஷ்ணன் சிரித்தார், “என்ன சந்திரா உனக்கு எந்த கதையும் தெரியவேண்டாம்.சரி டே போ. ஆனால் இந்த பனை ஏறும் தொழிலாளி பற்றி கேட்டா உனக்கு உன் பூர்வீக கதை தெரியும்” என்றார்.
சட்டென்று நிமிர்ந்தான் சந்திரன். “ஆம். நான் உன்னோடு பூர்வீக கதை பற்றி சொல்லப்போறேன்”.
“என்ன அய்யா சொல்றீங்க. என்னோட பூர்வீக கதை உங்களுக்கு தெரியுமா?”
“ஆமாம். எனக்கு உன்னோட பூர்வீகம் எல்லாமே நல்லா தெரியும். ஆனா எதுக்கு சொல்லணுமுன்னு நினைச்சேன். இப்போ உன் நிலமையை நினைச்ச பொறவு அதைபத்தி பத்தி உங்கிட்டே பேசலாமுன்னு நினைக்கேன்”-
“அய்யா சொல்லுங்கய்யா . தயவு செஞ்சு சொல்லுங்கய்யா”. சந்திரன் ஆர்வமாக அவரிடம் சென்று அமர்ந்தார்.
“சொல்றேன். எப்படியும் தோரணமலையில இருந்து வேன் வர குறைஞ்சது 2 மணி நேரமாவது ஆகும். அதுவரைககு நான் சும்மா இருந்தா நல்லா இருக்குமா?. அதனால உன் பூர்வீக கதை சொல்றேன். எங்கிட்ட வரதன் நிறைய சொல்லியிருக்கான்”.
ஆவலோடு அமர்ந்த சந்திரனிடம் கோபாலகிருஷ்ணன் பேச ஆரம்பித்தார். “உங்க தாத்தா பெயர் ராஜதுரை நாடார். பெரிய புரட்சியாளர். பனை தொழிலாளிகளுக்காக நிறைய தொண்டுகள் செய்தார். அந்த காலத்திலேயே ஆதிக்க சாதி காரர்களான பிராமணர்களை எதித்து நின்னவரு. அந்த ஊரு சட்டாம்பிள்ளை”.
“சட்டாம் பிள்ளைன்னா என்ன அய்யா?”
“சட்டாம் பிள்ளைன்னா அந்த காலத்து வாத்தியார். அப்படித்தான் உங்க தாத்தா ராஜ துரை இருந்தாரு”.
“அந்த காலத்தில பாபநாசம் மேலணை கட்டப்படவில்லை. ஆகவே அடிக்கடி ஆற்றில் வெள்ளம் வரும். வெள்ளம் வந்தால் அந்த தண்ணீர் காட்டாறு போல ஓடி வரும். திடீரென்று அந்த வெள்ளம் கிராமத்தினை சுற்றி வளைக்கும்”.
மிக ஆர்வமாக கோபாலகிருஷ்ணனிடம் கதை கேட்க உட்கார்ந்தான் சந்திரன்.
“அப்போது ஆற்றங்கரையில் உள்ள குடிசைகள், வைக்கோல் போர்கள் மற்றும் பாலம் கட்ட போடப்பட்ட மரச்சாமான்கள் போன்றவற்றை இழுத்து கொண்டு வரும். சில நேரம் மாடுகள், கோழிகள் போன்றவை வெள்ளத்தில் இழுத்துகிட்டு வரும். இந்த வெள்ளத்தில் அடித்துவரும் பொருள்களை காப்பாற்ற கிராமத்து இளவட்டங்கள் பொங்கி வரும் ஆற்றில் விழுந்து நீச்சல் அடித்து செல்வார்கள். இதில் கிராமத்தை சேர்ந்த இசக்கி தேவர் ஒரு கட்டையை பிடித்து கிட்டே நீந்தி செல்வாரு. பொறவு வெள்ளத்தினால் அடித்து வரும் பொருள்களை எடுத்துட்டு வருவார். சில நேரங்களில் உயிரோடு மாடுகள் வெள்ளத்தில் தவித்து வரும் அதையும் காப்பாற்றுவார்.
இசக்கி தேவர் மட்டுமில்ல பல இளவட்டங்கள் ஆத்துக்குள்ள இறகுவாங்க அதுல உங்க தாத்தா ராஜதுரை நாடாரும் நீந்தி போய் பல பொருளை எடுத்துட்டு வருவாரு. தாமிரபரணி ஆத்துல அவரு நீந்தி செல்லும் அழகை ஊர் மக்கள் “மணல் மேடு” என்று அழைக்க கூடிய கள்ளவாண்டன் சுவாமி கோயில் திரட்டில் நின்று வேடிக்கை பார்ப்பாவ. ஆற்று வெள்ளம் இரண்டு கரையையும் தொட்டு ஓடும். ஏற்கனவே பனையேறுதவிய உடம்பு சும்மா மரக்கட்டை மாறி இருக்கும். அவிய எதிர் நீச்சல் அடிககும் போது ஆத்து தண்ணீயே வழி விடும்.
கிராமத்து மக்கள் எல்லோரும் வீரம் செறிந்தவிய. தற்போது போல் அந்தக் காலத்தில் “சீமை உடை” என்று சொல்லப்படும் “நீர்கருவை மரங்கள்” கிடையாது. ஆகவே எல்லோரும் தாங்கள் சமையல் செய்ய மற்றும் பதனீர் காய்ச்ச எதிர் கரையில் உள்ள மணக்கரை மலையில் தான் விறகு பொறுக்குவாங்க. இதில் பெண்கள் அதிகம் பேர் விறகு பொறுக்க போவாங்க. அதிகாலை 5 மணிக்கு விறகு பொறுக்க போனா திரும்பி வர இரவு ஆயிடும்.
பாதுகாப்பு கருதி இந்த பெண்கள் எல்லோரும் கூட்டம், கூட்டமாக விறகு பொறுக்க போவாவ. அதிகாலை அவிய ஆத்தை கடக்கும் போது வெள்ளம் இருக்காது. ஆனால் திரும்பும் போது வெள்ளம் வந்துரும். இந்த வெள்ளத்தினை கண்டு பயப்பட மாட்டாவ. இளவட்டங்கள் மட்டுமல்லாமல் வயசானவங்க வரை வெள்ளத்தினை கண்டால் குதுகுலம்தான்.
அவிய பொறுக்கிய விறகு கட்டையை தண்ணீரில் போட்டு அதன் மேல் “முள்” குத்தாமல் இருக்க செடிகொடிகளையும், தாங்க கொண்டு போன துணிகளையும் போட்டு அதை இருக்கையாக மாத்தி அதன் மேல் ஏறி ஊக்காந்து கிடுவாவ. தண்ணீர்போக்குக்கு தக்க கையை அசைத்து எதிர் கரைக்கு வந்து சேர்ந்து விடுவாவ”
கோபாலகிருஷ்ணன் சொல்ல அந்த காலத்துக்கே சென்றான் சந்திரன்.
காட்சிகள் நகர்ந்தது. கோபாலகிருஷ்ணன் பேசியது எல்லாமே தன் கண் முன்னால் நடப்பது போலவே சந்திரனுக்கு தோன்றியது.
தைரியம் வாய்ந்தவர்களாக இந்த கிராமத்து பெண்கள் மற்றும் ஆண்கள் இருந்தார்கள். இதில் மற்றுமொரு விஷேசம் என்னவென்றால் இப்போது இருப்பது போல் தாமிரபரணி அந்தக்காலத்தில் புதர் மண்டி கிடக்க வில்லை. காலையும், கையையும் நீச்சல் தெரியாதவர்கள் அடித்தால் கூட தண்ணீர் போக்குக்கு சென்று அந்த மனிதரை காப்பாற்றி விடும். அது மட்டுமல்லாமல் ஆற்றங்கரையில் வசிப்பவர்கள் நீச்சல் தெரியாத மக்களே இருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது தாமிரபரணியில் புதர், உடைமரம், வேலிகாத்தான் செடி மண்டி கிடக்கிறது. இந்த ஆற்றில் நீச்சல் தெரிந்தவர்கள் இறங்கினால் கூட புதரில் சிக்கி உயிர் இழந்து விடுவார்கள்.
திறமை இருந்தால் கூட இயற்கை நம்மை பலிவாங்கி விடும், அபாய நிலை தாமிரபரணி ஆற்றில் உள்ளது. ஆகவே அன்று வாழ்ந்து அனுபவித்த மக்கள் கொடுத்து வைத்தவர்கள். கிராமத்துக்கு எதிர் கரையில் வேப்பங்குளம் என்று ஒரு கிராமம் இருந்தாகவும், இந்த கிராமத்தில் இருந்து தோணி சர்வீஸ் கிராமத்துக்கும் & வேப்பங்குளம் ஆகிய கிராமங்களை இணைத்தாகவும் வரலாறு மற்றும் செவி வழியாக மக்கள் கூறி வருகிறார்கள். அந்த காலத்திலேயே ஹீரோ சட்டாம்பிள்ளை ராஜதுரை நாடார்தான். வெள்ளப் பெருக்கு காலங்களில் வரும் சில அபூர்வ பொருள்களை இந்தக் கிராம மக்கள் தற்போதும் வீடுகளில் வைத்து உள்ளார்கள்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் வந்தால் ஊரையே சுற்றி வளைத்து விடும். கிராமத்தில் மேடான பகுதிக்கு மக்கள் கரையேறுவார்கள்.
கிராமத்தினை பொறுத்தவரை பனை தொழில் செய்பவர்களை பற்றி இவ்விடத்தில் கூறுவது அவசியம் . ஏன் என்றால் ராஜதுரை நாடார் பனை ஏறும்தொழிலாளிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார். ஆகவே தான் கோபாலகிருஷ்ணன் இந்த ஊர் பனை தொழிலாளிகள் பற்றி பேசினார்.
கிராமத்தில் பனையேறும் தொழில் செய்பவர்கள் காலை 3 மணிக்கே அரிவாளை தீட்ட ஆரம்பித்து விடுவார்கள். தெருவில் எங்கும் கல் தட்டும் சத்தம் கேட்கும். அரிவாளை தீட்ட இந்த கல்லில் உள்ள பொடியைத்தான் பயன்படுத்துவார்கள். முறுக்குதட்டி என்னும் பனையேறும் கருவியை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு இவர்கள் தெருவில் நடக்கும் போது காலில் போட்டு இருக்கும் கட்டை செருப்பின் சத்தம் தெரு முழுக்க எதிரொலிக்கும். தார் பாய்த்து, தார் நார் என்று சொல்லக்கூடிய பனையேறும் போது காலில் மாட்டும் பனைநாரால் செய்யப்பட்ட கருவியை தலையில் வைத்து கொண்டு அவர்கள் நடக்கும் போது கம்பீரமாய் தெரியும். அவர்கள் இடுப்பில் தென்னம் பாளையில் செய்யப்பட்ட குடுவையை மாட்டிக்கொண்டு செல்வார்கள். காலில் முள் குத்தாமல் இருக்க அவர்கள் கட்டையால் செய்யப்பட்ட செருப்பு கூட பனையில் இருந்து கிடைக்கும் மட்டையில் தான் செய்து இருப்பார்கள். இவர்கள் இடுப்பில் மாட்டியிருக்கும் குடுவைக்குள் பாளைஅருவாள், தீட்டப்பட்டு பத்திரமாக வைத்து இருப்பார்கள். மேலும் பதனீரை சுண்ணாம்பு பதனீராக மாற்ற சுண்ணாம்பும் வைத்திருப் பார்கள்.
இந்த தொழில் உடலை மூலதனமாக வைத்து செய்யக்கூடிய தொழில். இவர்களின் நெஞ்சிலும், கையிலும் பனை சிராய் குத்தி கொண்டே இருக்கும். தினமும் இந்த சிராய் குத்தும் சம்பவம் நடப்பதால் சில காலங்களில் அவர்களின் நெஞ்சும், கையும் காய்த்துப் போய் விடும். அவர்களின் நெஞ்சை பனையோடு சேர்த்து அனைத்து கொண்டு, தனது காலை முறுக்கு தட்டி மீது வைத்து கொள்வார்கள். பின் தார்நாரை இரண்டு காலிலும் கட்டிக் கொண்டு பனை ஏறுவார்கள். சுமார் 3 நிமிடங்களில் தம் கூட்டி முக்கால் பனை ஏறி விடுவார்கள். பின் சிறிது நேரம் பனையில் தொங்கிய படியே இளப்பாறுவார்கள். அதன் பின் தம் கட்டிக்கொண்டு ஏறி பனை உச்சியை அடைந்து விடுவார்கள். பனை மட்டையை பிடித்து கொண்டைக்குள் போய் தலைகீழாய் படுத்து கொண்டு பதனீர் சுரக்கும் கலையத்தின் உள்ளே சீவி விடப்பட்டிருக்கும் பாளையை எடுத்து சீவுவார்கள்.
பின் தன் இடுப்பில் மாட்டப்பட்டிருக்கும் தகரத்தில் அங்கே கட்டப்பட்ட மண் கலயத்தில் இருந்து பதனீரை இறக்குவார். சில பனையில் மூன்று தகரம் பதனீர் வரை இருக்கும். ஆகவே மூன்று தடவை ஓரே பனையில் ஏற வேண்டி நிலையும் ஏற்படும்.
இடுப்பில் கட்டப்பட்ட தகரத்தில் குறைந்தது 15 லிட்டர் பதனீரை வைத்து கொண்டு அவர்கள் பனையை விட்டு இறங்குவார்கள். இது சாதாரண விஷயம் கிடையாது. இந்த பதனீரை சாதாரண மனிதரால் இறக்க முடியாது. ஆனால் இந்த பனையேறும் தொழிலாளிகளுக்கு தெய்வம் தந்த அருள் கொடை என்றே அவர்கள் நினைத்தார்கள். ஒருவர் சுமார்25லிருந்து 50 பனை மரம் வரை ஏறுவார்.
இந்த இடத்தில் ஒரு வேடிக்கையான விஷயம் சொல்லவேண்டும். எந்தவொரு பொருள் என்றாலும் கலப்படம் செய்தால் தான் போலீஸ் பிடிப்பார்கள். ஆனால் பதனீர் விஷயத்தில் ஒரு எதிர்மாறான விசயம் உள்ளது.
இங்கு பதனீரில் சுண்ணாம்பை கலப்படம் செய்யவில்லை என்றால் “கள்ளு” பதனீராக மாறிவிடும். கள்ளு பதனீர் என்பது “மது” பானமாக ஆகிவிடும். ஆகவே கலப்படம் செய்யா விட்டால் பனை தொழிலாளியை போலிசார் பிடித்து விடுவார்கள். இந்த பதனீரை தேவாமிர்தம் என்றே சொல்வார்கள். வீட்டில் தண்ணீர் கொடுக்கும் போது ஒரு கொசு விழுந்தால் கூட அந்த தண்ணீரை கொட்டி விடுகிறோம். ஆனால் பனை மரத்தில் இறக்கும் பதனீரில் எத்தனை பூச்சிகள் எறும்புகள் கிடக்கிறது. அதை யெல்லாம் யாரும் ஒரு பொருட்டாக நினைப்பதே கிடையாது. இறக்கும் பதனீரை அப்படியே பட்டையில் ஊற்றி கண்ணை மூடிக்கொண்டு குடித்து விடுவார்கள்.
பனை மரத்தில் தான் எத்தனை அரிய மூலிகைப் பொருள்கள் கிடைக்கிறது.
இந்த கிராமத்தில் பதனீர் இறக்கும் மக்கள் முதலில் “தர்ம” பதனீர் கொடுத்து விட்டு தான் தொழில் தொடங்குவார்கள். குடிப்பதற்கு என்று யார் போய் பதனீர் கேட்டாலும் காசு வாங்காமல் கொடுப்பது, இந்த கிராமத்து மக்களின் நல்ல பண்பாடு.
பதனீர் இறக்கியவுடன் அவருடைய மனைவி அந்த பதனீரை தலை சுமையாக சுமந்து “விடிலி” என்று சொல்ல கூடிய இடத்துக்கு கொண்டு வருவார். ஆங்கே பெரிய “தாச்சி” என்று சொல்ல கூடிய 3க்கு 3 அடி உள்ள தகர டப்பாவில் ஊற்றி காய்ப்பார்கள். இதற்காக பெரிய அடுப்புகள் தயார் செய்யப்பட்டு இருக்கும்.
இந்த அடுப்பில் “பதனீர்” கொதிக்க வைக்க பெண்கள் அதிகமான நீர்க்கருவை முள் செடிகளை காய வைத்து பயன்படுத்துவார்கள். “பதனீர்” காய்க்க காய்க்க நல்ல தொரு வாசனையுடன் கருப்பட்டி தயாராகி விடும். பதனீர் “பொங்கி பொங்கி” வரும் போது அதை கட்டுப்படுத்த வைக்க ஆமணக்கு கொட்டையை இடித்து வைத்து இருப்பார்கள்.
பதனீர் நன்றாக காய்ந்தவுடன் “கூப்பதனீர்” என்று சொல்லக்கூடிய பதத்திற்கு பதனீர் வரும். அதில் வாழைக்காய் மற்றும் மாம்பழம் போன்ற பழங்களை போட்டு அதை தனியாக வைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.
பின் கருப்பட்டியாக பதனீர் ஆனவுடன் சிலர் அதை கருப்பட்டியாக்க தேங்காய் சிரட்டையில் ஊற்றுவார்கள். இது “சிரட்டை கருப்பட்டி” என்று சொல்வார்கள். சிலர் சுக்கு போட்டு அதை “சில்லி கருப்பட்டியாக” ஆக்குவார்கள். சிலர் இந்த கருப்பட்டியை பானையில் ஊற்றி வைப்பார்கள். அதற்கு பெயர் “பானைக்கருப்பட்டி”. சிலர் அதை “பனங்கற்கண்டாக” மாற்றுவார்கள். தற்போது சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் கருப்பட்டி காப்பி என்றால் சந்தோஷமாக குடிப்பார்கள். அந்த அளவுக்கு நோயாளிகளை கூட நம்பிக்கையோடு குடிக்க செய்வது இந்த பனைபொருளாகும்.
மிகவும் சுவையான பதனீர், போதை தரும் கள்ளு, மேலும் பல வகை கருப்பட்டி, நோய் தீர்க்கும் பனங்கற்கண்டு தரும் இந்த தொழிலாளிகள் சுமையோ மிக மோசமாக இருக்கும். இவர்கள் காட்டுக்குள் குடிசையில் தான் படுத்து தூங்குவார்கள். இரவு பகலாக பனையில் ஏறும் சில பனையேறிகள் ஒரு சில சமயங்களில் பனையில் இருந்து விழுந்து இறந்து விடும் சம்பவங்களும் நிகழும். பெண்களும் வேலை அதிகமாக இருக்கும். முள் பொறுக்குதல், பதனீரை பெற்று வருதல், பதனீர் காய்த்தல், அதை கருப்பட்டி ஆக்குதல், பனையேறிக்கு உணவு செய்தல் என்று அலைவதால் குழந்தைகளை “விடிலி காடு” என்றும் சொல்லப்படும் குடிசையில் போட்டு விட்டுத்தான் செல்வார்கள். அந்த வேளையில் விஷ சந்துகள் கடித்து குழந்தைகள் இறந்து விடும் துயரமான சம்பவங்களும் நிகழும். சில கை குழந்தைகள் அடுப்பு பற்றி தெரியாமல் கருப்பட்டி காய்க்கும் இடத்தில் போய் உள்ளே விழுந்து விடும் கொடிய சம்பவங்களும் நடக்கும்.
இந்தக் காரணங்களுக்காக பனைத்தொழிலாளர்கள் தொழிலை வெறுக்க ஆரம்பித்தனர். ஆனாலும் பனைத் தொழிலை பலரால் வெறுக்க முடியவில்லை. பனை ஓலை வீடுகள் கட்ட தேவை படுகிறது. அடுத்து பனங்கொட்டைகள் மூலம் பனங்கிழங்குகள் விளைகிறது. தமிழர் திருநாள் பொங்கலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பனங்கிழங்கு மண்ணில் மிக அருமையாக “திரட்சியாக” விளையும்.
அரும்பொருளை தரும் தொழில் என்பதால் சில கஷ்டங்களை சகித்து கொள்ள வேண்டி இருந்தது. வயதான பாட்டிகள் கூட பனை ஓலையை கொண்டு ஓலை பெட்டி, ஓலைப் பாய், ஆகியவை செய்து பிழைப்பார்கள். பனை மட்டையில் இருந்து நாரை பிரித்து எடுத்து அதில் கட்டில் கட்டி கொடுப்பார்கள். மீதி உள்ள பனை மட்டையை தோட்டைத்தினை சுற்றி சுற்றுச் சுவர் போல கட்டி வைத்து இருப்பார்கள்.
பனைப் பொருள்களில் ஒரு சிறு துரும்பை கூட விட்டு வைப்பது இல்லை. இந்த மக்கள் பனையில் இருந்து கழிந்து விழும் “சில்லாட்டை” போன்ற பொருளைக் கூட எரிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.
கிராமத்தில் நாளடைவில் பனை தொழில் மீது மக்களுக்கு வெறுப்பு வந்தது. உடலை மூலதானமாக வைத்து செய்யப்படும் இந்த தொழிலில் பல நேரம் உயிர் இழப்பு ஏற்பட்டது. மேலும் பனை தொழில் செய்யும் இளைய தலைமுறைகளுக்கு உறவு காரர்கள் பெண் கொடுக்க மறுத்தனர். இதனால் புதிய தலைமுறைகள் வியாபாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். எனவே கிராமத்தினை விட்டு மும்பை, சிலோன் என்று “திரைகடலோடி திரவியம்” தேட ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் கிராமத்தில் செங்கல் தொழில் நடை பெற்றது. ஆற்றங்கரையில் குறுமணல்கள் நல்ல விலைக்கு செங்கல் சூளை அதிபர்கள் வாங்க ஆரம்பித்தனர். பனை மரத்தின் அடியில் உள்ள குறுமணலை விலை பேசினர். அந்த மண்ணை விலைக்கு கொடுக்கும் போது மேலே உள்ள பனைமரத்தினை வெட்டும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் பனை மரங்கள் அழிய ஆரம்பித்தது.
பதனீர், பனங்கிழங்கு என்று கூவி விற்ற மக்களின் பனை மரம் வெட்டி சாய்க்கபட்டது. அந்த பனை மரம் எல்லாம் முழுதுமாக செங்கல் சூளைக்கு எரி பொருளாக சென்றது. மொத்தத்தில் பனைத் தொழில் அழிந்து விட்டது. இன்று கருப்பட்டியும் இல்லை, பனங்கிழங்கும் இல்லை. இவையெல்லாம் நாளை ஒரு காலத்தில் ஏதாவது ஒரு கண்காட்சியில், இதுதான் பனை மரம். இது தான் பனங்கிழங்கு என்று இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அந்தக் காலத்தில் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு “பனை வெல்ல தொழிலாளி கூட்டுறவு சங்கம் “ஒன்று செயல் பட்டது. இந்த சங்கத்தினை ராஜதுரை நாடார் தான் துவக்கினார். அப்போது இந்த சங்கம் மூலம் கடன் கொடுக்கப்பட்டு கருப்பட்டியை விலைக்கு எடுத்தனர். இந்த கருப்பட்டியை “கொட்டான்” என்று சொல்லக்கூடிய பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டியில் அடைக்கப்பார்கள். அதன்பின் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள பனைஅங்காடிக்கு இந்த கொட்டான்கள் கொண்டு செல்லப்படும். இதற்காக மாட்டுவண்டிகளை ராஜதுரையின் தாய் மாமன் பாலையா நாடார் கொண்டு வருவார். மாட்டு வண்டி ஓட்டுவதில் பாலையா நாடார் வல்லவர். அவருடன் இரண்டு மாட்டு வண்டி சேர்த்து கொள்ளப்படும். இரவு அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் அந்த வண்டிகள் வரிசையாக பாளையங்கோட்டை நோக்கி செல்லும்.
திருட்டு பயம் இருப்பதால் வண்டி ஓட்டிகளை கள்ளரை எதிர் நோக்க தேவையான ஆயுதங்களை கையில் வைத்து இருப்பார்கள்.
கிராமத்துக்கு பஸ் வந்தாலும், ஆபீசர் வந்தாலும் பதனீர், கருப்பட்டி கொடுப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்கள். ஊருக்கு முதல் முதலாக மின்சாரம் வந்த சமயம். வீட்டில் மின் இணைப்பு கொடுக்கப்பட இருந்தது. பெரும்பாலுமே வீட்டில் மின் இணைப்பு கொடுத்தால், அதை வீட்டு பெரியவர்கள் தொடக்கி வைப்பது வழக்கம். அதன்படி எங்கள் வீட்டில் மின்சாரத்தினை ராஜதுரை நாடாரோட தாயார் பார்வதியம்மாள் கையலால் தொடங்கி வைக்க மின் அலுவலர் கூறினார். பாட்டி மெயின் சுவீட்சை ஆன் செய்தவுடன் “பளிச்” என்று வெளிச்சம் வந்தது. அதை பார்த்த, மின்சாரம் பற்றி தெரியாத பாட்டி “அய்யோ.. தீ..” என்று அலறி விட்டார்.
அதைக்கண்டு எல்லோரும் சிரித்தார்கள். பாட்டி அதிகமாக யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டார். சிறந்த உழைப்பாளி. “ஜாக்கெட்” போட மாட்டார். கருத்த தேகம். உயரமானவர். நீண்ட முடி. உறுதியான உடற்கட்டு நாலு பேர் செய்யும் வேலையை… தானே இழுத்து போட்டு செய்யும் தகுதியானவர். உழைப்பாளி.
பாட்டியிடம் மின் அதிகாரி, “அம்மா இனிமே நீங்க ராத்திரி “திரி” விளக்கு போட்டு கஷ்டப்பட வேண்டாம். மின்சாரம் உங்களுக்கு விளக்காய் இருக்கும்” என்றார். பாட்டி வீட்டுக்குள் போய் இரண்டு சிரட்டை கருப்பட்டி எடுத்து கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார். அவர் ரொம்ப சந்தோஷமாக வாங்கி கொண்டார்.
கொஞ்சம் கொஞ்சமாக சந்திரனின் பூர்வீகம் கண்முன்வந்தது. “தனது தாத்தா ராஜாது¬ ர நாடார் நல்ல சமூக சேவகர். நாட்டு மக்களுக்கு நிறைய செய்து இருக்கிறார். அந்தகாலத்திலேயே வசதியாவும் இருந்து இருக்கிறார். அதனால தான் முதல் முதலில மின்சாரம் வரும் போது அவிய அம்மா பார்வதி பாட்டியை வச்சி கரண்டை கொடுத்து இருக்காரு. அப்போ நாம நல்ல குடும்பத்திலே தான் பிறந்து இருக்கோம்”.
பெரும் மூச்சி விட்டான் சந்திரன்.
கோபாலகிருஷ்ணன் மேலும் அவன் பிறந்த கிராமத்தினை பற்றி பேசியது மீண்டும் நினைவில் வந்து சென்றது.
“சந்திரா நீ பிறந்த கிராமம் சாதாரண கிராமம் இல்லை. அந்த காலத்திலேயே மிகச்சிறப்பா விளங்கிய கிராமம்” என்று கூறி விட்டு கிராமத்தினை பற்றி பேச ஆரம்பித்தார். .
கடந்த 15 வருடங்களில்தான் குலசை முத்தாரம்மன் கோயில் “வேடம்” போடும் நிகழ்வு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. அதற்கு முன்பு குலசையை சுற்றியுள்ள பகுதியில் தான் இதற்காக தசரா குழு இருக்கும். தவிர தற்போது உள்ள அளவுக்கு மிக அதிகமாக இருக்காது.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வேடம் கட்டி நேர்ச்சை செலுத்தும் வழக்கம் கிராமத்தில் இருந்துள்ளது.
ஊர் அம்மன் கோயில் திருவிழா நடக்கும் போது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மிக அதிகமாக இருக்கும். ஒரு பக்கம் கரகாட்டம் நடக்கும். அது முடிந்தவுடன் குறவன் குறத்தி ஆட்டம் துவங்கும். மற்றொரு இடத்தில் காவடி எடுத்து பெரியவர் கடையனோடை இசக்கி என்பவர் அரியபெரிய காரியங்களை செய்வார். தனது வாயில் இருந்து கலர் கலராய் பேப்பர்களை எடுத்து விட்டுக்கொண்டே இருப்பார். தனது உச்சந் தலையில் காவடியை நிறுத்தி அதில் இருந்து கையையே பிடிக்காமல் நெற்றி, மூக்கு, கழுத்து, வயிறு என்று அந்த காவடியை தனது காலடி வரை இறக்குவார்.
மேலும் கரகாட்டகாரர்கள் தீப்பந்த விளையாட்டு, சாமி வேட்டைக்கு போகும் விளையாட்டு, பெண் பார்க்கும் விளையாட்டு, ஏணி மீது ஏறி கரகம் ஆடும் விளையாட்டு, கண்ணை கட்டி கொண்டு கோமாளி வயிற்றில் வாழைக்காயை வைத்து கரகம் கீழே விழாமல் சரியாக அந்தக்காயை வெட்டும் விளையாட்டு என்று மயிர் கூச்செரியும் விளையாட்டு எல்லாம் நடத்துவார்கள்.அது மட்டுமல்லாமல் அம்மன் ஆட்டம் போடும் கரகாட்டக்காரிகளின் கைகளில் அப்படியே எரியும் தீச்சட்டியைக் கொடுத்து விடுவார்கள். அந்த அளவுக்கு விளையாட்டு நடக்கும் (தற்போது உள்ள கரகாட்டம் ரெட்டை அர்த்தம், மோசமான அங்க அசைவுகள், மற்றும் இளசுகளின் மனதை அலைக்கழிக்க செய்யும் ஆட்டமாக போய்விட்டது)
ஒரு பெண் கரகத்தினை தலையில் வைத்துகொண்டு, மிதிவண்டிகளில் இரண்டு “சக்கரங்களையும்” கையில் பிடித்து கொண்டு ஓரளவு தலைகீழாய் நிற்பது போல சைக்கிளை ஓட்டுவார். அந்த திறமையெல்லாம் அம்மன் கோயில் கொடை விழாவில் பார்ப்போம்.அதே போல்தான் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் வேடம் அணிவார்கள். சிவன், அனுமன், அம்மன், கோமாளி, பிச்சைக்காரன், போலீஸ்காரர் என்று பல வேடங்கள் போடுவார்கள். நையாண்டி மேளம் முழங்க, ஒரு வட்டம் இடப்பட்டு அதில் அவர்கள் கை, கால்களை உயர்த்தி மிக அழகாக, வேகமாக ஆட்டம் போட்டபடி சுற்றுவார்கள்.அதில் இசக்கி தேவர் ஆங்கிலேய துரை வேஷமும், ராக்கப்பத்தேவர் ராட்டிய வேஷமும், பூப்பண்டாரம் நாரயணன் பெண் வேஷமும், சுப்பையா தேவர் குறத்தி வேஷமும், குருநாதன் என்பவர் லெட்சுமணன் வேஷமும் போடுவார்கள். வடக்கூர் வடிவேல் என்பவர் சிம்ம வேஷமும், தெற்கூர் ஊர்காலன் ராமர் வேஷமும் போடுவார்கள்.
தற்போது குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வேஷம் போடும் நிகழ்ச்சி மிக பிரபலமாக அடைந்துள்ளது. ஆனால் 35 வருடங்களுக்கு முன்பே சந்திரன் பிறந்த கிராமத்திலே வேஷம் கட்டி அன்னைக்கு நேர்த்தி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது.
கோயில்திருவிழா ரொம்ப பிரமாதமாக இருக்கும். இப்போ குலசேகரபட்டினம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் குருசு கோயில எப்படி திருவிழா நடக்குதோ. அதுக்கு எப்படி வீதி வீதியாக தீடீர் கடை முளைக்கிதோ . அது போலத்தான் இந்த கிராமத்திலும் திருவிழா நடக்கும்.
கோயில்திருவிழா என்றாலே கிராமத்துக்கு ராட்டினம் வந்து விடும். வீதி மிட்டாய், தேங்காய் எண்ணெய் மிட்டாய், சுத்து மிட்டாய், சீனிமிட்டாய் என்றெல்லாம் குறிப்பிடும் ஏணி மிட்டாய் சுட சுட போட்டு விற்பார்கள். இதற்காக தீடீர் கடை. தீடீர் அடுப்பு எல்லாமே உருவாகிடும். ஆரம்பகால கட்டத்தில் திருவிழாக் காலங்களில் வீதிகளில் முளைக்கும் திடீர் மிட்டாய் கடைகளில் விற்பனை செய்யப்பட்டதால் இந்த ஏணி மிட்டார் வீதிமிட்டாசி ஆனது.
கருப்பட்டியில் செய்த இந்த மிட்டாய் துண்டை இரண்டாக உடைத்தால் நடுவில் குழல் போன்ற பகுதியிலிருந்து கருப்பட்டிப்பாகு தேன் போல ஒழுகும். அதனால் தேன் ஒழுகும் மிட்டாய் என்று குறிப்பிடப்பட்டது. இதுவே காலப்போக்கில் தேங்காய் எண்ணெய் மிட்டாசி என்று திரிந்து போனது. சுட்டு தட்டில் வட்டமாய் சுற்றி அடுக்கப்படுவதால் இது சுத்துமிட்டாசி ஆனது. சீனிபாகுவில் தோய்ப்பதால் சீனிமிட்டாசி என ஆனாது. இந்த பழமையான இனிப்பு, முன்னர் கருப்பட்டியில் தயார் செய்யப்பட்டது.
ஒரு காலத்தில் பனை பொருளான கருப்பட்டியின் பயன்பாடு அதிகம். காலப்போக்கில் பனைமரங்கள் குறைந்து போயின. கூடவே கருப்பட்டி உற்பத்தியும்தான். உற்பத்தியில்லாமல் அதன் விலை உயர்ந்தது. எனவே இப்போது கருப்பட்டிக்குப் பதில் சர்க்கரை. அதாவது சீனிதான் பயன்படுத்தப்படுகிறது. மற்றபடி செய் முறை, சேர்மானங்கள் மாறவில்லை. பண்டிகை காலங்களில் வீடுகளில் செய்து சுவைக்கப்பட்ட இந்த இனிப்பு காலப்போக்கில் கடைகளில் விற்பனைக்கு வந்தது. இப்போ இந்த மிட்டாயை சுத்தி சுத்தி ஏணி போல இருப்பதால் ஏணி மிட்டாய் என்றழைக்கப்படுகிறது.
இந்த கதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சந்திரனுக்கு போராடித்தது.
“அய்யா, ஊர் கதையெல்லாம் இருக்கட்டும். எங்க குடும்ப கதையை சொல்லுங்க” என ஆர்வமுடன் கேட்டான் சந்திரன்.
அந்த சமயத்தில் தோரணமலையில் இருந்து வேன் வந்து விட்டது.
கோபாலகிருஷ்ணன் கதையை விட்டு விட்டு வேனுக்கு அருகில் சென்றார்.
அங்கிருந்து வந்த இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொள்ள புத்தகத்தினை ஏற்ற ஆரம்பித்தார்கள். சந்திரனும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தான்.
கிட்டத்தட்ட 20 நிமிடத்தில் புத்தகத்தினை ஏற்றினார்கள்.
அதன்பின் வேனில் வந்தவர்கள் அவர்களிடம் விடைபெற்று கிளம்பினர்.
“அப்பாட” என பெரும்மூச்சி விட்டார் கோபாலகிருஷ்ணன். “யப்பாடி ஒரு படியாக எல்லாமே முடிந்தது, வா கிளம்புவோம்” என்றார்.
சந்திரனுக்கு மனதுக்குள் கஷ்டமாக இருந்தது. என் குடும்ப கதையை சொல்றேன் என்று சொல்லிவிட்டு தாத்தா பெயரை மட்டும்சொன்னவரு. ஊர் பழம் பெரும் கதையை இவ்வளவு நேரமும் சொல்லி நேரத்தை போககிட்டு கிளம்புறேன் என்கிறார். விட மாட்டேன் இன்னைககு விடமாட்டேன். என் குடும்ப வரலாறை கேட்காம விட மாட்டேன்.
ஆனித்தரமாக நினைத்தவனுக்கு , வேறு பிரச்சனை ஒன்று காத்திருந்தது.
“அய்யா தப்பா நினைக்க கூடாது. உங்க கூடவே அலையிறேன். என் தலையே பிச்சிகிடும் போல இருக்கு. என் தாத்தாவை பத்தி சொன்னீங்க. அவரு ரொம்ப நல்லவராத்தான் இருந்து இருக்காரு. வீரரா, ஊருக்கு படிப்பு சொல்லி கொடுக்கிற சட்டாம்பிள்ளையா, நல்லது செய்பவரா இருந்து இருக்கிறாரு. ஆனால் என் சாதி சரியில்லைன்னு சொல்றாங்க. எங்க அப்பா ஏன் சின்ன வயசிலே மும்பை போனாரு. எதுக்கு அவரு சாக தண்டியும் ஊருக்கே வரலை. எனககு ஒண்ணுமே புரியலையே அய்யா”.
“உங்க கிராமத்தோட புகழை எல்லாத்தையும் எதுக்குசொன்னேன் தெரியுமா?. இந்த புகழு க்கு காரணமே உங்க தாத்தாத்தான். ஊர் திருவிழா எதுவானாலும் முன்னாலத்தான் நின்னு செய்வாரு. இவருக்கும் அப்போ கிறிஸ்தவ மதம் பரப்ப வந்த வெளிநாட்டு காரங்களுக்கும் கூட தொடர்ப்பு இருந்துச்சு. ஆனாலும் இவர் அவங்க கூட பழகினாரு. ஆனால் எந்த காரணத்தை கொண்டு கிறிஸ்தவ மதத்தை மட்டும் அவர் ஏத்துக்கவே இல்லை”.
“அய்யா நீங்க சொல்றது எதுவுமே புரியலை. எனககு கொஞ்சம் விளககமா சொல்லுங்க”
“சொல்றேன். நிறைய சொல்லணும். அதுக்கு ஒரு நாளு போதாது. நிறைய நாளு வேணும்.” கோபாலகிருஷ்ணன் எழுந்தார். அதன் பின் காரைநோக்கி நடந்தார்.
காரில் இருந்து ஒரு தோள் பையை எடுத்தார்.
“இது வரதன் எழுதிய டைரி. அதுல உன் தாத்தா. அப்பா உன் குடும்பத்தை பத்தி எழுதி வச்சிருக்கான். எல்லா புத்தகத்தினையும் தோரணமலை நூலகத்துக்கு கொடுத்த நான் இந்த டைரியை மட்டும் உனக்காக கொடுக்கல. இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படி உனக்கு உன் குடும்ப வரலாறு தெரியும்”.
டைரியை அவனிடம் ஒப்படைத்தார்.
அதை வாங்கி கொண்ட சந்திரன் அப்படியே நின்றான். அவனுககு என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை.
“அய்யா”. சந்திரனுக்கு வார்த்தை வர மறுத்தது.
தலையை ஆட்டினார். “உன்குடும்பம் மெழுகுவர்த்தி மாதிரிடே. இந்த சமுகத்துக்காக நிறைய உழைச்சது. ஆனால் அவியளோட இளகிய மனசில ஒரு பெண்ணுககு வாழ்க்கை கொடுக்க போயி. கடைசியில சாதி கெட்ட குடும்பமாக ஆகி போச்சு”.
எதுவுமே புரியாமல் நின்றான் சந்திரன்.
“இந்தா இது என் போன் நம்பர். எதுவும் அவசரமுன்னா என்னை கூப்பிடு.”
கோபாலகிருஷ்ணன் அந்த விசிட்டிங் கார்டை அவன் கையில் கொடுத்தார்.
“என்னை புது பஸ்ஸ்டாண்டில விட்டுரு. நான் வந்து நாளாச்சி. என் வீட்டிலே தேடுவாங்க”
டைரி எடுத்து காருக்கு முன்னால் வைத்தான் சந்திரன். அதன் பின் காரில் கோபாலகிருஷ்ணன் ஏறிக்கொள்ள காரை புது பஸ்ஸடாண்டு நோக்கி செலுத்தினான்.
கார் கே.டி.சி நகரை விட்டு வெளியே வந்து , ஹகிரவுண்டு வழியாக புதுபஸ்ஸ்டாண்டை நோக்கி கிளம்பியது.
புது பஸ்ஸ்டாண்டில் அவரை இறக்கி விட்டான்.
“அய்யா” நா தளுதளுக்க கேட்டான். “இந்த டைரியை நீங்க படிச்சிருக்கீங்களா?”.
“ஆமாம்”.
“சுருக்கமா எங்க குடும்பம் இந்த ஊரை விட்டு ஏன் மும்பை போச்சின்னு சொல்ல முடியுமா?”
“நீ. இங்க தானே இருக்கப்போற. மெதுவா டைரியை படி. முதலில உங்க தாத்தா கதை. அப்புறம் . அப்பா கதை ஒவ்வொன்னா படி. உங்க குடும்பம் இந்த ஊருக்காக எவ்வளவு பெரிய தியாகம் செஞ்சிருக்காங்கன்னு தெரியும்.”
என்று சொல்லி விட்டு கோபாலகிருஷ்ணன் புது பஸ்ஸ்டாண்டுக்குள் நடையை கட்டினார்.
காரை விட்டு இறங்காமலேயே டைரியை பார்த்தான்.
அவனுடைய மனம் இப்போது டைரியை படிக்கும் நிலையில் இல்லை.
என்ன செய்ய. சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தான். அதன் பின் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
எங்கே செல்வான். யாரிடம் பேசுவான். பேசாமல் மும்பை கிளம்பி விடலாமா?
குழப்பத்துடன் மெயின்ரோட்டில் ஏறினான். அப்போது முத்துகிளியிடம் இருந்து போன் வந்தது.
Ê சட்டென்று சந்திரன் முகம் பிரகாசமானது.
போனை எடுத்தான்.
“என்னம்மா?”
பதட்டமாக பேசினாள். “நீங்க எங்க இருக்கீய?”
“புது பஸ்ஸ்டாண்டுல இருக்கேன்”.
“எங்க அய்யாவுக்கு நெஞ்சு வலிக்குன்னு சொன்னாவ”.
“என்ன?”
“ஆமாம். நான் இப்போ 108ல எங்க அய்யாவை கூட்டிகிட்டு ஹைகிரவுண்ட் வாரேன். நீங்க கொஞ்சம் வாரீயளா?” அழுகையை அடக்க முடியாமல் பேசினாள்.
“கூட யாரும் வரலையா?”
“இல்லை”. அழுதாள் முத்து கிளி. எல்லாரும் காட்டு வேலைக்கு போயிட்டாவ. நான் தான் 108க்கு போன் பண்ணினேன் அவிய வந்து அய்யாவை தூக்கிட்டு வாரவ”
“கவலைபடாதே. அய்யா நல்லா இருக்காவுளா?”
“இல்லை ரொம்ப வலிக்குன்னு சொல்லுதாவ. மூஞ்சியெல்லாம் வேக்குது. ஒரு நர்ஸ் கூட இருந்து சப்போர்டு பண்ணுதாவ. எனக்கு பயமா இருக்கு”
“பயப்படாத. நான் அங்க வந்துருதேன். நீ ஹகிரவுண்டு வந்துரு. இப்போ எங்கன வாரீய?”
“சரி. செய்துங்கநல்லூர் தாண்டிட்டோம்”
“சரி. போனை வையி. நான் வந்திருதேன்”.
போனை வைத்தான். அதன் பின் காரை வேகமாக ஹைகிரவுண்டு நோக்கி செலுத்தினான்.
இவனை அறியாமலேயே இவனுக்கு வேர்த்துக்கொட்டியது.


