அமிதாப் பச்சன் (பிறப்பு:அக்டோபர் 11, 1942) இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அமிதாப் ஹரிவன்ஷ் பச்சன் என்பதன் சுருக்கமே அமிதாப் பச்சன் என்பதாகும். இவர் ‘பிக் பீ’ மற்றும் ‘ஷாஹேந்ஷா’ என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப் பட்டார். 1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில் ‘கோபக்கார இளைஞன்’ எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார்.
பச்சன் பிரபல திரைப்பட நடிகை ஜெய பாதுரியை திருமணம் செய்து கொண்டார். பச்சன் தம்பதிகளுக்கு ஷ்வேதா நந்தா மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருபிள்ளைகள் இருக்கின்றனர். மகன் அபிஷேக்கும் தந்தையைப் போலவே நடிகராக உள்ளார். அபிஷேக், நடிகையும் உலக அழகிப் பட்டம் வென்றவருமான ஐஸ்வர்யராயை மணந்துள்ளார்.
பச்சன் தனது தொழில்வாழ்க்கையில் பற்பல சிறப்பு விருதுகள் வென்றுள்ளார். அதில் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், மற்றும் பன்னிரண்டு பிலிம்பேர் விருதுகள் போன்றவை அடங்கும். அதிலும் பிலிம்பேர் விருதுகளில், சிறந்த நடிகர் என்ற தேர்வுகளில் அதிக பட்ச எண்ணிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி, பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி அளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.
இவர் கலைத்துறையில் ஆற்றிய பணிகளுக்காக 1984 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மசிறீ, 2001 இல் பத்ம பூசண், 2015 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் ஆகியவற்றை அளித்து கௌரவித்தது. திரைப்பட உலகிலும் அதற்கு அப்பாலும் இவரது தனித்துவமான வாழ்க்கைக்காக பிரான்ஸ் அரசாங்கம் 2007 ஆம் ஆண்டில் அதன் மிக உயர்ந்த குடிமையியல் கௌரவமான நைட் ஆஃப் தி லெஜியன் ஆப் ஹானர் என்ற விருதை வழங்கியது.
உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் அமிதாப் பச்சன். இவர் தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற இந்திக் கவிஞர் ஆவார். இவரது தாயார் தேஜி பச்சன் இன்றைய பாகிஸ்தான், அன்றைய பைசல்பாத்தைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண்மணி ஆவார்.ஆரம்ப காலத்தில் பச்சன் ‘இன்குலாப்’ என்றே அழைக்கப்பட்டார். அந்தப்பெயரானது இந்தியச் சுதந்திரப்போரட்ட காலத்தில் எழுப்பப்பட்ட தாரக மந்திரம் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவர் மறுநாமகரணமாக, அமிதாப் என்று அழைக்கப்பட்டார். அதன்பொருளாவது: ‘ அணையா விளக்கு’ என்பதாகும்.ஸ்ரீவத்ஸவா என்பது குடும்பப்பெயராக இருப்பினும், அவரது தந்தை பச்சன் எனும் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். அந்தப் பெயரிலேயே, அவரது படைப்புகளை வெளியிட்டு வந்தார். திரைப்படங்களில் முதல்தோற்றத்தில் இருந்து அமிதாப் என்ற பெயரிலேயே நடிக்கத் தொடங்கினார். பச்சன் என்ற பெயரே நாளடைவில் எல்லா பொது நோக்கங்களுக்காகவும் அவரது தற்போதைய குடும்பத்தாரின் பெயராகவே மருவி விட்டது.
அமிதாப், ஹரிவன்ஷ் ராய் பச்சனின் இரு மகன்களில் மூத்தவர் ஆவார். இரண்டாம் மைந்தன் அஜிதாப் ஆவார். அவரது தாயார் மேடைநாடகங்களில் நடித்துள்ளார். அவருக்கும் திரைப்பட வாய்ப்பு தேடிவந்தது. ஆனாலும் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பச்சனின் பணிவாழ்க்கையில் விருப்பத்தேர்வுகள் செய்யும் போதெல்லாம் தாயாரின் செல்வாக்கு உரிய தாக்கத்தைச் செய்தது. அவரும் தன்மகன் மேடையில் நடுஇடம் பெறுவதையே வலியுறுத்தி வந்தார். ஆரம்பக்கல்வியை அலகபாத் ஜனன பிரபோதினி மற்றும் சிறுவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பிறகு நைனிடாலில் உள்ள ஷேர்வுட் கல்லூரியில் கலைத்துறையையே முக்கியப் பாடமாகப் பயின்றார்.அதன்பின் டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரோரிமால் கல்லூரியில் அறிவியல் பாடம் கற்று அதில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தற்போதைய கொல்கத்தா அன்று கல்கத்தாவாக இருந்தபொழுது அங்கிருந்த ‘பேர்ட் அண்ட் கோ’ கப்பல் கம்பெனியில் இருபது வயதில் சரக்குத் தரகராக வேலை பார்த்து அதைக் கைவிட்டார். நடிப்பின்மேல் தணியாத தாகம் இருந்ததால் அதையே பின்தொடர்ந்தார்.
1973 ஜூன் 3ஆம் நாள் நடிகை ஜெயபாதுரியை, வங்காளத் திருமணச் சடங்குகள்படிக் கைப்பிடித்தார். தம்பதியர்களுக்கு இருபிள்ளைகள் பிறந்தனர் . மகள் ஷ்வேதா மகன் அபிஷேக் ஆவார்கள்


