தூத்துக்குடியில் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிலைய உரிமையாளரை கல்லால் தாக்கி கொல்ல முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் தில்லைராஜன் மகன் ராஜா ரகுபதி (26) வீட்டு உபயோகப் பொருட்கள் ஏஜென்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வாலிபர் அவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டினாராம். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுக்கவே அவரை கல்லால் தலையில் தாக்கினாராம். மேலும் அவரது பைக்கை சேதப்படுத்தினாராம்.
இதில் காயம் அடைந்த ராஜா ரகுபதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மாசிலாமணி புரத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் சுதந்திர ராஜா (32) என்பவரை கைது செய்தனர். பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி மிரட்டல் அடிதடி உள்பட 16வழக்குகள் உள்ளது.


