தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி பொன்னம்மாள்(45).
அதே பகுதியைச் சேர்ந்த மூக்கன் மகன் இசக்கிபாண்டி என்பவர் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன் இல்லாத நேரத்தில் பொன்னம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த இசக்கிபாண்டியன் கையில் வைத்திருந்த அரிவாளால் பொன்னம்மாள் நெற்றியில் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் இசக்கிப்பாண்டியன் தந்தை மூக்கன் மற்றும் தாய் பிச்சம்மாள் ஆகியோர் அருகில் கிடந்த கட்டையால் பொன்னம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாமடைந்த பொன்னம்மாளை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இசக்கிப்பாண்டியன் குடும்பத்துடன் தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னம்மாள் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் தற்போது அவரது வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் பொன்னம்மாள் இறந்த செய்தி தெரிந்தவுடன் இசக்கிபாண்டியன் வீட்டை பொன்னம்மாள் உறவினர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் இசக்கிபாண்டியன் வீட்டின் எதிரே இருந்த அவரது தந்தையின் வீட்டையும் சூறையாடினர். இதையடுத்து ஆதிச்சநல்லூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு தப்பியோடி பொன்னம்மாளை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடிய இசக்கிபாண்டியன், அவரது தந்தை மூக்கன், தாய் பிச்சம்மாள் ஆகிய மூவரையும் ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர்.


