நாவலந் தீவு என்று அழைக்கப்பட்ட குமரிக்கண்டம் கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த நிலப்பகுதியான இந்தத் தமிழ் கண்டம் தான் தொல் தமிழரின் ஆதி பூமி.
ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணக்கரை நாடு, ஏழ்குறும்பனை நாடு என இங்கு நாற்பத்து ஒன்பது நாடுகள் இருந்துள்ளன. இப்படி தான் நமது தொன்மங்களும் சங்க இலக்கியங்களும் தொல் தமிழரின் தாய் நிலத்தைப் பற்றி பேசுகின்றன.
இந்த நிலப்பகுதி ஏழ்தெங்க நாட்டில் அதாவது தென்னைகள் நிறைந்த நிலப்பகுதியில் தொடங்கி ஏழ்குறும்பனை நாட்டில் முடிகிறது. குறும்பனையை அதாவது சிறிய பனைமரத்தை வடலி என்று அழைப்பது வழக்கம். தென்னைகள் நிறைந்த தென் திசையில் தொடங்கி குறும்பனைகள் அதாவது வடலிகள் நிழைந்த வட திசை உள்ளிட்ட நிலப்பகுதி என்பதாகப் இதற்குப் பொருள்.
இன்றும் ஈழத்தின் யாழ்பாணம், தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பனைகள் நிறைந்திருப்பது குமரிக்கண்டத்திற்கு ஒரு நிலவியல் சான்றாக இருந்து வருகிறது. மேலும் பனைகள் நிறைந்தப் பகுதிகளில் தமிழர்கள் நிறைந்து காணப்படுகிறார்கள் அல்லது தமிழர்கள் நிறைந்தப் பகுதிகளில் பனைகள் நிறைந்து காணப்படுகின்றன என்றும் சொல்லப்படுவதுண்டு.


