*திசையன்விளை கீரைக்காரன்தட்டு மகாதேவன்குளத்தைப்பூர்வீகமாகக் கொண்ட திரு.சு. மாடசாமி என்ற பாக்கியநாதன் உபதேசியார் குடும்பத்தினர்*
திருநெல்வேலி மாவட்டம் மருதகுளத்தில் பெரிய உபதேசியார் ஆக 1862 – 1883 வரை பணி செய்த
சு.மாடசாமி என்ற பாக்கியநாதன் உபதேசியார் குறித்தும் அவரது குடும்ப முன்னோர் மற்றும் உலகமெங்கும் பரந்து வாழும் அவரது வழிமரபினர், அவர்களது சீரிய சேவைகள் குறித்தும் இக்கட்டுரையில் காண்போம்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தாலுகா திசையன்விளைக்கும் சுவிசேஷபுரத்திற்குக்கும் இடையில் உள்ள கிராமங்கள் கீரைக்காரன்தட்டு மகாதேவன்குளம்.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக இவ்விரு கிராமங்களும் உள்ளன.இவ்விரு கிராமத்தாரும் உறவினர்கள்.
கீரைக்காரன்தட்டு கிராமத்தில் 1800 -1802 க்குட்பட்ட காலகட்டத்தில் அநேகர் கிறிஸ்துவை ஏற்றதால் கிறிஸ்தவ சபை உருவானது.
அதே காலகட்டத்தில் இங்கு மிஷன் பள்ளிக்கூடமும் தொடங்கப்பட்டது. இவ்விரண்டும் இன்றளவும் செயல்பட்டு வருகிறது. கீரைக்காரன்தட்டை அடுத்து தொடர்ச்சியாக உள்ள மகாதேவன்குளம் கிராமமே சு.மாடசாமி என்ற பாக்கியநாதன் உபதேசியார் அவர்களது பூர்வீகக் கிராமம்.
*குடும்ப முன்னோர்*
மகாதேவன்குளத்தில் பெரும் செல்வந்தரான
திரு.சுப்பையா நாடார் – ராஜவல்லி அம்மாள் தம்பதியருக்கு 1826 இல் மகனாக மாடசாமி பிறந்தார்.
பெரும் செல்வந்தரான தந்தை திரு. சுப்பையா நாடார் தம் மகன் மாடசாமிக்கு சிலம்பம், வர்மக்கலை, சித்தவைத்தியம், ஆகியவற்றை முறைப்படி கற்றுக்கொடுத்து அதில் மிகுந்த திறமை கொண்டவராக மாற்றினார்.
வட்டுதார் உடுத்தி சிலம்பாட்டம் ஆடிய மாடசாமி அதில் பிறரை காட்டிலும் சிறந்த தேர்ச்சி மிக்கவராக இருந்தார்.
*மாடசாமி மனம்மாறி பாக்கியநாதன் என்ற பெயரில் திருமுழுக்கு எடுத்தல்*
மாடசாமிக்கு 20 வயதான நிலையில் திசையன்விளை சுற்றுவட்டார கிராமங்களில் பாளையங்கோட்டை
சி . எம் . எஸ். தலைமை மிஷனரி G.பெற்றிட் அவர்கள் தலைமையிலான மிஷனரிமார் மற்றும் உபதேசிமார் அடங்கிய குழுவினர் 1845 மற்றும் 1846 ஆண்டுகளில் நற்செய்தி அறிவித்தனர். அவர்களால் அறிவிக்கப்பட்ட கிறிஸ்தவ நற்செய்தியின் மூலம் வாலிபரான சு.மாடசாமி கிறிஸ்தவத்தின் மேல் ஈர்ப்பு கொண்டவர் ஆனார்.
இதைக் கண்ட அவரது தந்தை திரு.சுப்பையா நாடாரும் அவரது குடும்பத்தினரும் அவரை கிறிஸ்தவத்தை விட்டு விலகுமாறு கேட்டுக் கொண்டனர். வாலிபர் சு.மாடசாமி அதை ஏற்காததால் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர்.
வீட்டை விட்டு விரட்டப்பட்ட மாடசாமி இரவோடு இரவாக நடந்துசென்று அதிகாலையில் பாளையங்கோட்டை CMS தலைமை மிஷனரி
Rev. G.பெற்றிட் ஐயரவர்களிடம் 1846 இல் தஞ்சமடைந்தார். அவரை ஏற்றுக் கொண்டு தங்க இடமளித்து செமினரியில் கல்வி பயிலச் செய்தார். Rev. G.பெற்றிட் ஐயரவர்கள் அவருக்கு வேத போதனையையும் அளித்தார்கள்.
Rev.பெற்றிட் ஐயரவர்கள் சு.மாடசாமி விரும்பியபடி அவருக்கு பாக்கியநாதன் என்ற பெயரில் திருமுழுக்குக் கொடுத்தார்கள்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தில் வருகிற *பாக்கியவான்கள்* என்ற சொல்லாட்சி மாடசாமியை அதிகம் கவர்ந்ததால் பாக்கியநாதன் என்ற பெயரை ஞானஸ்நானம் பெயராக அவர் விரும்பி தெரிந்து கொண்டதாக அறியமுடிகிறது.
Rev. G.பெற்றிட் ஐயரவர்கள் மூலம் செமினரி கல்வி கற்று பாக்கியநாதன் அவர்கள் ஆசிரியர் மற்றும் விசாரணை உபதேசியார் எனும் மேல்நிலைக்கு உயர்த்தப்பட்டார்
*மருதகுளம் வாசியாக மாறிய பாக்கியநாதன் உபதேசியார்*
பாளையங்கோட்டையில் இருந்து விசாரணை உபதேசியார் ஆக மருதகுளத்திற்கு அனுப்பப்பட்டு வந்த திரு. சு.பாக்கியநாதன் உபதேசியார் அவர்கள் 1862 இல் மருதகுளம் சபைக்கு அங்கேயே தங்கி பணி செய்யும் உபதேசியார் ஆக Rev.சார்ஜென்ட் ஐயரவர்களால் நியமிக்கப்பட்டார்கள் அதற்கு முன்பு அங்கு பணி செய்த
தேவசகாயம் உபதேசியாரைப் போன்று பாக்கியநாதன் உபதேசியாரும் அனைத்து குணநலன்களும் உடல் வலிமையும் பெற்றிருந்தார்கள். மருதகுளத்தில் வாழ்ந்துவந்த சபை மக்கள் அனைவரும் அன்போடும் மகிழ்ச்சியோடும் சு.பாக்கியநாதன் உபதேசியார் அவர்களை ஏற்றுக்கொண்டார்கள் அவர் மருத குளத்தில் நிலங்களையும் வயல்களையும் வாங்கி தம்மை மருதகுளம் வாசியாகவே மாற்றிக்கொண்டார்
மருதகுளம் கிராம மக்கள் அனைவரும் அவரை ஐயா என்றே அழைத்தனர்
*தேவ தரிசனத்தின்படி திருமணம்*
சு.பாக்கியநாதன் உபதேசியார் அவர்கள் குருவானவர் ஒருவரின் மகளான நல்லம்மாள் என்ற நற்குணசாலியை திருமணம் செய்தார்
இந்த திருமணம் தேவ திட்டத்தின்படியும்
தேவ தரிசனத்தின் படியும் நடைபெற்றது.
*சு.பாக்கியநாதன் உபதேசியாரின் நற்பணிகள்*
ஊர் தலைவர் ஏனோக்கு நாடாரின் இரத்த சாட்சி மரணத்தை தொடர்ந்து
சூறையாடப்பட்ட நிலையில் உருக்குலைந்து போய் இருந்த மருதகுளம் கிராமத்தை தமது இறைபணிகள் மற்றும் சமூக நற்பணிகள், மனோ தைரியம் மூலமாக ஊரில் ஒருங்கிணைப்பு செய்து ஊரை கட்டியெழுப்பி மருதகுளத்தை வீரபூமி ஆக்கியவர் பாக்கியநாதன் உபதேசியாரே. அவரை மருதகுளம் நன்றியோடு நினைவு கூறவேண்டும். அவருக்கு மருதகுளத்தைச் சுற்றி ஏராளமான நிலபுலன்கள் இருந்ததால் உபதேசியார் பணிக்கான ஊதியத்தை அவர் வாங்கவில்லை.
தமது பிள்ளைகள் அனைவரையும் நன்கு கல்வி பயில வைத்து உயர்த்தினார் அவர்களை அக்காலத்திலேயே சென்னைக்கு அனுப்பி கல்லூரி கல்வி பயில வைத்தார் அவரது அநேக பிள்ளைகள் பட்டதாரிகள் ஆனார்கள்
மருதகுளம் அக்காலமே கல்வியில் உயர பாக்கியநாதன் உபதேசியார் அவர்கள் ஓர் காரணமாக இருந்தார்.
*திரு.சு.பாக்கியநாதன் உபதேசியாரின் குடும்பம்*
பாக்கியநாதன் உபதேசியாருக்கு எட்டு பிள்ளைகள்
1. ஜோசப் பாக்கியநாதன் (வக்கீல் பணி செய்தார் – இவரே நாடார் சமூகத்தின் முதல் வக்கீல்)
2. எட்வர்ட் பாக்கியநாதன் (கிராம முன்சீப் ஆகப் பணி செய்தார்)
3. கனம். சாமுவேல் பாக்கியநாதன் (அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், தலைமை ஆசிரியர், பாளையங்கோட்டை திருமண்டல அலுவலக எழுத்தர் ஆகிய பணிகளை சிறப்புற செய்தவர், இந்திய மிஷனரி சங்க முன்னோடி நிறுவனர்களில் ஒருவர், இந்திய மிஷனரி சங்கத்தின் முதல் மிஷனரியாக 06.04.1904 இல் புறப்பட்டு சென்று 1923 வரை அங்கு சிறப்புற பணி செய்தார்கள் .
1923 இல் அதில் சம்பளம் பெறும் பொதுகாரியதரிசியாக பணி செய்தார்கள்
1923 – 1924 இல் திருநெல்வேலி திருமண்டல குருவானவராக பணி செய்தார்கள் மற்றும்
1891 இல் பாலியர் பக்தி விருத்தி சங்கம் என தொடங்கப்பட்ட பாலியர் சங்கத்தின் நிறுவனர்
Rev. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களே.
1892 இல் பாலர் மனமகிழ்ச்சி பண்டிகையை திருமண்டல அளவில் தொடங்கியவர் இவரே.
இவரே பாலியர்சங்கத்தின் நிறுவனர் மற்றும் முதல் காரியதரிசி,
1850 இல்பாலியர் நேசன் என தொடங்கப்பட்டு ஒரே மாதத்தில் நிறுத்தப்பட்ட அந்த மாத இதழ் ஐ மீண்டும் தொடங்கி 1903 க்குள் 3500 பிரதிகளாக அனுப்பச் செய்தவர்இவர்.
பாலர் ஞாயிறு தொடங்கி அதற்கென பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் என்ற பாடல் எழுதி அதனை பாலர் பவனியில் பாட செய்தவர் இவரே.)
4. தானியேல் பாக்கியநாதன் (நிலக்கிழார்)
5. கனம். சாலமோன் பாக்கியநாதன்
(இலங்கையில் கல்லூரி விரிவுரையாளராக பணி செய்தவர், இந்திய மிஷனரி சங்க இரண்டாம் மிஷனரியாக தோர்ணக்கல் செல்வதற்காக தமது நல்ல வேலையை ராஜினாமா செய்துவிட்டு தமது மனைவி ஜேன் பாக்கியநாதன் உடன் மிஷனரியாக ஆந்திரா சென்றவர் இவர்.
பிற்காலத்தில்
சி. எம். எஸ். சுத்தாங்க சுவிசேஷ சபையின் நிறுவனர்களில் இவர் ஒருவர், அந்த சபைக்கான தற்காலிக கமிட்டியின் முதல் தலைவராகவும் நிலையான கமிட்டி உருவாக்கப்பட்டதும் அதன் இரண்டாவது தலைவராகவும் பணி செய்தவர்இவர், மருதகுளம் அருகிலுள்ள பாக்கியநாதபுரத்தை உருவாக்கியவர் இவரே
CMS மிஷன் சபைகளில்
சி .எம். எஸ் மிஷனின் அடிப்படை சித்தாந்த கோட்பாடான சடங்காச்சாரங்கள் அற்ற சுத்த சுவிசேஷம் என்ற சுத்தாங்க சுவிசேஷக் கோட்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தவர், தோரணக்கல் IMS பணி தளத்திலிருந்து திருநெல்வேலி திருமண்டல பணிக்கு திரும்பியபின்
1919 இல் நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற ஆங்கிலிக்கன் மிஷன் தென்மண்டல சபை கூட்டத்தில் ஆல்டர் திரு மேஜைகளில் திருச்சிலுவை வைக்கப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து அது சி.எம்.எஸ் மிஷன் கோட்பாட்டுக்கு எதிரானது என்பதை உறுதிபட தெரிவித்து அதை தடுத்து நிறுத்தியவர் இவர்.)
6. ஜீவசிகாமணி பாக்கியநாதன் (கொழும்புவில் பணி செய்து பின் இந்தியா திரும்பியவர்)
7. ஜோஷ்வா பாக்கியநாதன் (இளவயதில் மரணம்அடைந்தார்)
8. பெண் (இவர் மதுரையில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டிருந்தார். மதுரை அத்தை என குடும்பத்தாரால் அழைக்கப்படுகிறார்)
*திரு.சு.பாக்கியநாதன் உபதேசியாரின் மரணம்*
திரு.சு.பாக்கியநாதன் உபதேசியார் அவர்கள் 09.06.1883 அன்று மருதகுளத்தில் மரணமடைந்தார்கள்.
மருதகுளத்திலிருந்த அவரது சொந்த வாழைத்தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். உபதேசியாரின் மனைவி நல்லம்மாள் 07. 01. 1914 அன்று மரணமடைந்தார். திரு.சு.பாக்கியநாதன் உபதேசியாரின் கல்லறை அருகே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
*திரு.சு. பாக்கியநாதன் உபதேசியாரின் வழி மரபினர்*
திரு.சு. பாக்கியநாதன் உபதேசியாரின் வழி மரபினர் பெருங்குடும்பமாக உலகமெங்கும் பரவி வாழ்கின்றனர் மருதகுளத்தில் அநேக குடும்பத்தினர் வசிக்கின்றனர் மருதகுளத்தின் அருகில் பாக்கியநாதபுரம் என்ற பெயரில் முன்னோர் பெயரிலான கிராமத்தை உருவாக்கி மொத்தமாக அங்கு குடியேறி வசித்து வருகின்றனர். .. பாளையங்கோட்டை,நாகர்கோயில், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் சென்னை பெங்களூர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எங்கும் என உலகமெங்கும் பரவி வாழ்கின்றனர்
(முதல் படத்தில் இருப்பவர் திரு சு.பாக்கியநாதன் உபதேசியார் மற்றும் நல்லம்மாள் பாக்கியநாதன்)


