பெருங்குளத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த மினி பஸ் கண்டக்டர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள பெருங்குளம் கிராமம் சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம் மகன் சந்தனகுமார் (22). மினி பஸ்ஸில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் பஸ்ஸில் வரும் 17 வயது மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. இருவரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரில் உள்ள கோவில் முன் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மகளை காணவில்லை என்று அந்த மாணவியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா விசாரணை நடத்தி வருகிறார்.
விசாரணையில் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்ததாக சந்தனகுமாரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


