35.மனசெல்லாம் மாஞ்சோலை எழுதிய வழக்கறிஞர் பினேகாஸ்
மலை பயணத்தில் கார் பழுதானால் மிகவும் கடினம். அடுத்த முடிவு எடுக்க முடியாது. ஆன்மிக பயணமாக மலைமீது ஏறினால், அங்கே நாம் தரிசிக்க இருக்கும் தெய்வத்தினை நோக்கி வணங்கி நிற்போம். “தடைகளை கடந்து எங்களை கூட்டிச்செல் முருகா” என்போம். ஆனால் மாஞ்சோலையை பொறுத்தவரை அனைத்துமே சுற்றுலா தலம் போன்ற இடங்களும் பசுமையான காடுகளும் தான். ஊட்டி கொடைக்கானல் போன்ற ஊசி வளைவு சாலைகள். ஆங்காங்கே காவல் தெய்வங்கள் இருந்தாலும் கூட, அந்த தெய்வங்கள் வெளியே இருந்து சென்று வணங்குபவர்கள் மிக மிக குறைவு, அங்கே இருக்கும் மக்கள் தான் வணங்குகிறார்கள்.
எனவே எங்கள் கார் பழுதானதற்காக எந்த தெய்வத்தினை நோக்கி வணங்க என்று தெரியவில்லை. ஆனாலும் மனதுக்குள் அகத்தியரை வணங்கி கொண்டேன். காக்காச்சி மலையை பார்க்கபோகிறோம் என்றவுடன் சுடலை மாடனையும் உச்சரித்துக்கொண்டேன்.
நண்பர் சங்கர பாண்டியன் கார் பேனட்டை திறந்தார். எஞ்சினில் இருந்து புகை கிளம்பியது. சிறிதுநேரம் திறந்து வைத்திருந்தார். அவர் நம்பிக்கையை கைவிடவில்லை. எப்படியும் மலை உச்சிக்கே போய் விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
அதற்காக அவருக்கு தெரிந்த மெக்கானிக் வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.
அண்ணன் ஏ.வி.ஏ கஸ்ஸாலி அவர்கள் ஒரு சமயம் மாஞ்சோலை வந்து இரவில் குதிரைவெட்டியில் தங்கி விட்டு மறுநாள் காலையில் கீழே இறங்கும் போது யானை வழி மறித்து விட்டது என்று என்னிடம் பகிர்ந்தார். அந்த காலம் என் நினைவுக்கு வந்தது.
அவரை மறித்தது போல யானைகள் இங்கே வந்தால் என்ன செய்ய என்ற பயமும் தொற்றிக்கொண்டது.
ஆனாலும் மனதுக்குள் சிறு தைரியம். அப்படி எதுவும் வராது. பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன்.
நேரம் போகவில்லை காலார நடந்தேன்.
“மனசெல்லாம் மாஞ்சோலை” என்ற தலைப்பிட்ட புத்தகத்தினை நினைவு கூர்ந்தேன். அந்த நூலை வழக்கறிஞர் பினேகாஸ் என்பவர் எழுதியிருந்தார். மிகவும் நல்ல புத்தகம் மாஞ்சோலையை பற்றி இதுவரை யாரும் இப்படியரு புத்தகத்தினை எழுதியதில்லை.
பெரும்பாலும் என்னை போன்றவர்கள், ஒரிடத்தினை எழுத வேண்டும் என்றால் அங்கே சென்று காத்து கிடந்து , அங்கு மக்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தை கேட்டு எழுதுவேன். (அந்த புத்தகம் முடிந்தவுடன் மற்ற ஊரைப்பற்றி எழுத கிளம்பிவிடுவோம். ஒருகட்டத்தில் நாம் எழுதிய புத்தகத்திற்கு தகவல் தந்தது யார் என்று மறந்து விடுவோம். இதற்காகவே என்னுடைய புத்தகத்தில் எனக்கு யார் தகவல்சொன்னாலும், எந்த நூலில் இருந்து தகவல் எடுத்தாலும் அவர்கள் பெயரை பதிவிட்டு விடுவேன். அதுபோலவே பினேகாஸ் பெயரைபதிவிடாமல் இந்த பகுதியை எழுத இயலாது) ஆனால் எழுத்தாளர் பினேகாஸ் அப்படியல்ல, மாஞ்சோலையில் வளர்ந்து அங்கே உள்ள ஒவ்வொரு செயலையும் தினமும் பார்த்து தன்னை தானே ரசித்து, அங்குள்ள இடங்களையெல்லாம் ரசித்து எழுதியுள்ளார். அதில் முதல் அத்தியாயமே மாஞ்சோலை முழுவதையும் படம் பிடித்து காட்டியிருந்தது. வாகனம் சீராகட்டும், அதுவரை பினோகோஸ் அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு, அவரது நூலைப்பற்றி சற்று அசைப்போடுவோம்.
1918ல் மெட்ராஸ் பிரசிடென்சி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அப்போதைய சிங்கம்பட்டி ஜமீன்தாருடைய மகன் மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கின் விசாரணையை தமிழ்நாட்டிலிருந்து மும்பை நீதிமன்றத்திற்கு மாற்றி நடத்த அதிக பணம் தேவைப்பட்டது. அந்த செலவிற்காக சிங்கம்பட்டி ஜமீன்தார் தன்னிடமிருந்த நிலத்தில் சுமார் 8374 ஏக்கர் நிலத்தை, 99 வருட குத்தகைக்கு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நுஸ்லேவாடியா என்பவருக்குச் சொந்தமான பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பி.பி.டி.சி.) என்ற தனியார் நிறுவனத்திற்கு 12.02.1929 அன்று கைமாற்றினார். அந்த நிலம்தான், திருத்தப்பட்டு தேயிலை செடிகள் நடப்பட்டு மாஞ்சோலை எஸ்டேட்டாக உருவானது.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என ஐந்து எஸ்டேட்டுகளை உள்ளடக்கியதுதான் மாஞ்சோலை எஸ்டேட். இங்கு பார்ப்பதற்கு கண்கவரும் வண்ணம் ஏராளமான இடங்கள் உண்டு. மாஞ்சோலையில் நாலாம் காட்டு குருசு மொட்டை, ஆறாம் காட்டு கெஜம், பதினெட்டாம் காடு வரக்கட்டு, வனப்பேச்சியம்மன் கோவில், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் போன்றவை பார்க்கக்கூடிய இடங்கள். அதோடு தலைமை மருத்துவமனையும், தேயிலை தொழிற்சாலையும், தேயிலைத் தோட்ட நிர்வாகத்தின் குரூப் மேனேஜர், சூப்பிரண்டு அலுவலகமும் இருக்கும். ரிஷி ஓடை, சுண்ணாம்பு டிவிஷன் குடியிருப்பு பிரிவுகளும், குளிப்பதற்கு ஆறாம் காடு அருவியும் இருக்கும். மிகச் சுவையான மாஞ்சோலை டீ ரஸ்க் அங்கே கிடைக்கும்.
அதே போல நாலுமுக்கு எஸ்டேட்டில் 1942-ல் கட்டப்பட்ட மிக நீளமான மரப்பாலம், நூறு ஏக்கர் ஆறு, ஐம்பது ஏக்கர் ஆறு, ஒன்னாம்காடு, பத்தாம்காடு, ஏழாங்காட்டு ஒற்றை வாகை மரம், ஆடு பாலம், வட்டப்பாறை அருவி, மொட்டச்சி மலை, அதோடு மக்கள் கடந்து செல்ல மரப்பாலமும், சங்கிலி பாலமும் ஆங்காங்கே இருக்கும். யானைகளை எப்போது போனாலும் பார்க்க முடிகிற யானைக்காடு அங்கே உள்ளது. கோழிசுப்பையா தாத்தாவின் பெயரால் அழைக்கப்படும் தேயிலை நாற்று பதியம் போடும் கோழித்தவரணையும், இப்ராஹிம் காக்கா பொறுப்பில் இருந்த காக்கா தவரணையும் வருடம் முழுவதும் வற்றாமல் ஓடுகிற சின்ன மணிமுத்தாறு அருவி போன்றவை நாலுமுக்கு எஸ்டேட்டில் பார்க்க கூடிய இடங்கள்.
குதிரைவெட்டியில் வனத்துறைக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு விருந்தினர் விடுதியும், அங்கிருந்து மணிமுத்தாறு உள்ளிட்ட ஐந்து அணைகளை பார்ப்பதற்கு ஒரு வாட்ச் டவரும், இறச்சப்பாறை தண்ணீர் அருவியும் உள்ளது. குதிரைவெட்டி உச்சியிலிருந்து பார்த்தால் காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு மற்றும் கடையம் ராமநதி அணைகள் அனைத்தும் துல்லியமாக தெரியும். இங்குள்ள அருவியிலிருந்து விழுந்து ஓடும் தண்ணீர் தெளிந்த நீரோடையாக இருக்கும். ஒரு ரூபாய் நாணயம் விழுந்தால் கூட துல்லியமாக கண்டுபிடிக்கும் அளவிற்கு தண்ணீர் அவ்வளவு தூய்மையாக இருக்கும்.
காக்காச்சி எஸ்டேட்டில் மிகப்பெரிய புல் மைதானம் ஒன்று உள்ளது. மைதானம் முழுவதும் பச்சைபசேலென பச்சை ஆடை உடுத்தியதைப் போலிருக்கும். குறைந்த வீடுகளே உள்ள காக்காச்சி எஸ்டேட் முழுவதுமே பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். காக்காச்சி மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில் ஒவ்வொரு புத்தாண்டு பிறப்பின்போதும், யாராவது ஒருவர் பெயிண்டால் அந்த ஆண்டை எண்களால் எழுதிவிடுவார்கள். அதனைத்தூரத்தில் இருந்து பார்க்கும் போது மிகவும் வியப்பாக இருக்கும்.
ஊத்து எஸ்டேட்டில் போக்கர் பாலம், ஆங்கிலேய பிரிஸ்லி துரையின் கல்லறை, அருகருகே அமைந்துள்ள மாதா கோயில் மற்றும் ஊத்து பள்ளிவாசல், லுக் அவுட் வியூவ் பாயிண்ட், 27ம் காட்டிலுள்ள அருவி மற்றும் ஆர்கானிக் தேயிலை பேக்டரி ஆகியவை உள்ளது. நாலுமுக்கு எஸ்டேட்டிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோதையாறு பகுதியில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான விடுதியும், தென் இந்தியாவில் மேற்கு நோக்கி ஓடும் கோதையாறும், கோதையாறு அணையும், மின்வாரிய ஊழியர்களுக்குச் சொந்தமான குடியிருப்புகளும் உள்ளது. அங்கு லோயர் கோதையாறு மற்றும் அப்பர் கோதையாறு என்கிற இரண்டு பகுதிகள் உள்ளது. அப்பர் கோதையாறில் முத்துக்குளிக்கும் இடம் உள்ளது. கோதையாறு அணையின் ஆழமான பகுதிகளுக்கு சென்று விலை மதிக்க முடியாத முத்துக்கள், முத்துச்சிப்பி மற்றும் நண்ணீர் மட்டிகளை மூதாதையர்கள் எடுத்து வந்துள்ளார்கள்.
கோதையாறு அணைக்கட்டின் நீர்ப்பிடிப்பு பகுதியான முத்துக்குளிவயல் பகுதி வழியாக சென்றால் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாலமோர் எஸ்டேட்டும், அதன் பிறகு காளி கேசம் அருவியும் அப்படியே நடந்து போனால் தோவாளை மலையடிவாரத்திலுள்ள தடிக்காரன்கோனம் ஊரும் வந்துவிடும். ஆரம்ப காலத்தில் கோதையாறு அணை கட்ட இந்தப் பாதையைத்தான் மக்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.
அங்குள்ள ஐந்து எஸ்டேட்டுக்களும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குள் வரும். ஆனால் கோதையாறு மட்டும் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. அங்கேயுள்ள ஒற்றை இலக்க வாக்காளர்களுக்காக 160 கி.மீ மலைப்பாதை வழியாக ஒவ்வொரு தேர்தலின் போதும் சிறப்பு வாகனம் வந்து போகும். காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து 15 நிமிடத்திற்குள் ஓட்டு போட்டு முடிக்கும் தமிழ்நாட்டின் ஒரே பகுதி கோதையாறுதான்.
அதே போல லோயர் கோதையாறு பகுதியில் மிக நீளமான வின்ச் ஒன்று உள்ளது. அந்த வின்ச் பாதை அவசரமான மருந்து பொருட்கள் கொண்டு வரவும், கன்னியாகுமரியிலிருந்து எளிதாக கோதையாறுக்கு முக்கிய அரசியல் பிரமுகர்கள், ஆட்சியாளர்கள், வனத்துறையினர் வந்து செல்லவும் பயன்படுகிறது. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அந்த வின்ச் பாதையை பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை. லோயர் கோதையாறு பகுதியில் மின்சாரம் தயாரிக்கும் மிகப்பெரிய பவர் ஹவுஸ் ஒன்றும் உள்ளது. கோதையாறு அணையிலிருந்து மின்சாரம் எடுத்த பிறகு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விவசாய பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைகிறது.
மாஞ்சோலை எஸ்டேட்டை, மீண்ட சொர்க்கம், மன்னவன் வந்தானடி,நிலா பெண்ணே, சார் ஐ லவ் யூ, ஆனந்த தாண்டவம், பூமணி, சுந்தர புருஷன், பேராண்மை போன்ற திரைப்படங்களில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் சுந்தரபுருஷன் திரைப்படத்தில் கோதையாற்றில் நடிகை ரம்பா ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ஒரு திட்டு தற்பொழுது மாஞ்சோலை மக்களால் ‘ரம்பா மொட்டை’ என அழைக்கப்பட்டு வருகிறது.
கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை ஐந்து எஸ்டேட்டுகளில் துவக்கப் பள்ளிகளும், மாஞ்சோலை எஸ்டேட்டில் மட்டும் உயர்நிலைப் பள்ளியும் இருக்கிறது. தேயிலைத் தோட்டத்தில் மறைமுகமான கொத்தடிமை முறை நிலவி வருவதாலும், மக்களின் கொடிய வறுமையாலும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க முடியாமல், அவர்களுக்கு 18 வயது நிரம்பியதும் அங்கேயே தேயிலை பறிக்கும் வேலையில் தற்காலிக பணியாளராக சேர்த்து விடுகிறார்கள்.
மிகச் சொற்பமான குழந்தைகள் மட்டுமே எஸ்டேட்டிலிருந்து கீழே இறங்கி கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் சேர்ந்து தொடர்ந்து படிக்கிறார்கள். மாணவ மாணவியர்கள் அரசு இலவச விடுதியிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்கி மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். அங்கிருந்து கல்லூரிப்படிப்பை தாண்டியவர்களை விரல் வீட்டு எண்ணிவிடலாம்.
வருமானத்தைப் பொறுத்தமட்டிலும் தேயிலை, காஃபிக் கொட்டை பறிப்பது, ஏலக்காய் பிடுங்குவது, மிளகு எடுப்பது போன்ற தோட்ட வேலைகளை செய்வதன் மூலம் கிடைக்கும் குறைந்த பட்ச. கூலியை நம்பித்தான் எஸ்டேட் தொழிலாளர்களின் பொருளாதாரச் சூழல் உள்ளது. நோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், சுநந்திர தினம், குடியரசு தினம், மே தினம், ஓணம் பண்டிகை ஆகியவற்றிற்கு மட்டுமே அரசு விடுமுறை உண்டு. மீதமுள்ள அனைத்து நாட்களிலும் வழக்கம் போல தேயிலை தோட்ட வேலை இருக்கும்.
மருத்துவ வசதிகள் என்று பார்த்தால் பி.பி.டி.சி. தேயிலை கம்பெனி நிர்வாகத்தால் ஐந்து எஸ்டேட்டுகளிலும் சிறிய மருந்தகங்கள் செயல்படுகிறது. ஐந்து எஸ்டேட்டிற்கும் பொதுவான பி.பி.டி.சி. தலைமை மருத்துவமனை மாஞ்சோலை எஸ்டேட்டில் உள்ளது. தீவிர சிகிச்சையென்றால் தோட்டத் தொழிலாளர்கள் திருநெல்வேலி ஹைகிரவுண்டில் இருக்கும் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்குத்தான் வர வேண்டும். தொழிலாளர்களின் மருத்துவ செலவுகளை அவர்களின் கூலியிலிருந்து நிர்வாகம் பிடித்துக் கொள்ளும்.
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு பேருந்துகள் இம்மூன்று காரணிகள் மட்டும்தான் மாஞ்சோலை எஸ்டேட் மக்களை அரசின் குடிமக்கள் என்ற பதத்துக்குள் கொண்டு வருகிறது.
எஸ்டேட்டுக்கு வரும் மூன்று அரசு பேருந்துகள், தேயிலை லாரி, கொழுந்து வண்டி (டிராக்டர்) மற்றும் வனத்துறை வாகனங்கள், கம்பெனியின் மேனேஜர்கள் பயன்படுத்தும் புல்லட் வாகனம் தவிர்த்து வேறு எந்த வாகனமும் முன் அனுமதி இன்றி அங்கு வரமுடியாது.
பாபநாசம், தென்காசி மற்றும் திருநெல்வேலியிலிருந்து வரும் மாஞ்சோலை அரசு பஸ் மூலம் சென்றால் எந்த அனுமதியும் யாரிடமும் வாங்கவேண்டியதில்லை. அங்குள்ள தொழிலாளர்கள் யாரேனும் உறவினர்களாக இருந்தால் அவர்களின் வீடுகளில் தங்கிக்கொள்ளலாம்.
மாஞ்சோலையை பற்றி அசைபோடலோடு எங்கள் வானத்தினை பார்த்தேன். சங்கரபாண்டி மேலும் முயற்சி செய்து கொண்டிருந்தார். அருகில் கார் போகும் அளவு தான் வழி இருந்தது. இரண்டு கார்கள் எங்களை முந்தி சென்றன. காரில் இருந்தவர்கள் எங்களை பரிதாபமாக பார்த்தப்படி சென்றனர். மாஞ்சோலைக்கு பஸ் சென்றுள்ளது. அது திரும்பும் நேரமாகி விட்டது என்று முத்து பாண்டி எங்களை அச்சுருத்திக்கொண்டார்.
இந்த சமயத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது.
படங்கள் உதவி & மாஞ்சோலை செல்வகுமார்
(பொருநை ரகசியங்களை தேடி பயணிப்போம்)


