வல்லநாடு காசநோய் பிரிவிற்கு உட்பட்ட உழக்குடி கிராமத்தைச் சார்ந்த 14 வயதுடைய சிறுவன் காசநோய் மற்றும் இரத்த சோகையினால் (ஹீமோகுளோபின்) பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த வாரம் வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய சிறுவனுக்கு வல்லநாடு காசநோய் பிரிவு மூலம் காசநோய்க்கு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிறுவனுக்கு கடந்த திங்கள்கிழமை (26.09.2022) அன்று ரத்த அளவு குறைந்து மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். இதன் காரணமாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பரிந்துரை செய்து உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரத்தம் தேவைப்பட்டது. சிறுவனின் தந்தை இரத்த தானத்திற்கு கொடையாளர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார், ஆனால் அவர் குருதிக் கொடைக்கு தகுதியானவராக இல்லாததால் இரத்தம் கொடுக்க இயலவில்லை.
இதனை அறிந்த வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் காசநோய் மற்றும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த தானம் செய்தார். இரத்த தானத்தின் போது ரத்த வங்கி ஆய்வக நுட்பனர் பாலா உடனிருந்தார்.


