நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் பலரை கைது செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திடிரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு செய்துங்கநல்லூர் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து போலீசாருக்கும் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


