ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
இயேசுவின் 12 சீடர்களின் ஒருவரான புனித சந்தியாகப்பருக்கு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி நதிக்கரையில் 420 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆலயம் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜீலை 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும்.
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த குருசு கோவில் திருவிழா கடந்த ஜூலை 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6.00 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும் நற்கருனை ஆராதனையும் நடந்தது.
10ம் திருவிழாவை முன்னிட்டு இன்று புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது.
இதையடுத்து, தேர்பவனியை புனித சந்தியாகப்பர் ஆலய பங்கு தந்தை கிஷோக் தொடங்கி வைத்தார். ஆலயத் திருத்தேரில் மாதாவும், சப்பரத்தில் புனித சந்தியாகப்பரும் வீதி உலா நடந்தது.
திருத்தேரின் முன்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தேரை இழுக்கும் போது பின்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் அவர்களை தேரை இழுக்க விடாமல் போட்டி போட்டுக்கொண்டு தேரை பின்பகுதியில் இழுத்தனர். தேர் பவனியின் போது மாதாவிற்கும் புனித சந்தியாகப்பருக்கும் பக்தர்கள் தங்களது குழந்தைகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக செலுத்தி மீண்டும் பெற்றுக் கொண்டனர். இதைபோல், உப்பு, மிளகு, பூக்கள் தூவி பக்தர்கள் புனித சந்தியாகப்பரை வழிபட்டனர்.


