வசவப்பபுரம் சமத்துவபுரம் சீரமைக்கும் பணியை கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 10 வருடமாக பராமரிக்கப்படாமல் இருந்த 149 சமத்துவபுரங்களை 190 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வசவப்பபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனவரதநல்லூர் சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் சீரமைக்க வேண்டும், அங்கு உள்ள பூங்காக்கள், சமுதாய நலக்கூடத்தையும் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் சமத்துவபுரம் மேம்பாட்டு நிதியில் இருந்து 2.28 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டமாக 30 வீடுகளை சீரமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை பார்வையிடுவதற்கு கூடுதல் ஆட்சியர் திட்ட இயக்குனர் சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அவர் சமுதாய நலக்கூடம் மற்றும் வீடுகளில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் அங்கு வந்த பொறியாளர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் விரைவில் இந்த பணியை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரி, ஒன்றிய பொறியாளர்கள் சித்திரை சேகர், ஜேசுராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேந்திர பிரபு, கண்ணன், ஓவர்சீர்கள் சிவக்குமார், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


