எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தனது நாத்தனாரின் தூரத்து சொந்தத்தின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வந்த தனது மாமியாரும், கணவனும் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து மனசுக்குள் பொறுமிக் கொண்டிருந்தாள் வசுந்தரா.
குளித்துவிட்டு வந்த மாமியார் “வசுந்தரா, பாத்ரூமில் நல்ல வாசனை வருதே. பினாயில் பிராண்டை மாற்றி விட்டாயா?” எனக் கேட்டார்.
குளித்துவிட்டு வந்த கணவன், பெட்ரூமில் நுழைந்து உடைகளை மாற்றிக் கொண்டு வந்தவன் “வசுந்தரா, பீரோவில் ஜாஸ்மின் ஸ்பிரே வாசனை வருதே. புதிதாக வாங்கி இருக்கிறாயா?” எனக் கேட்டான்.
பின்னர் டைனிங் ஹாலில் குழந்தைகளுடன் இருவரும் அமர, சாப்பாடு பரிமாறினாள்.
“வசுந்தரா, எனக்கு தயிர் மட்டும் போதும்” என்று சொல்லிவிட்டு, சாப்பிட்டவர் “என்னாச்சு? தயிர் ஓவரா புளிக்குதே! தயிர் வேண்டாம். சாம்பார் எடு” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “அம்மா, சாம்பாரில் உப்பு ஜாஸ்தி. சாப்பிடவே முடியல. வசுந்தரா, உனக்கு என்னாச்சு இன்னைக்கு?” எனக் கேட்டான் கணவன்.
“துக்க வீட்டுக்குப் போனதில் உங்களுக்கு கொரோனா பரவி இருக்குமோ என டெஸ்ட் பண்ணினேன். உங்களுக்கு சுவையும் வாசனையும் நல்லாத் தெரியுது” என சொல்லிக்கொண்டே, தனியாக எடுத்து வைத்திருந்த சுவையான சாம்பாரையும், தயிரையும் எடுத்துக் கொடுத்தவளை, வாஞ்சையோடு பார்த்தனர் கணவனும் மாமியாரும்.


