தூத்துக்குடியில் ஆர்வத்துடனும் சேவை மனப்பான்மையுடனும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு படையில் (Road Safety Patrol) உள்ள பள்ளி மாணவர்கள் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.வி.டி சிக்னல், மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் சிக்னல் பகுதி மற்றும் குருஸ் பர்னானந்து சிலை அருகில் உள்ள சிக்னல் பகுதிகளில் ஆர்வத்துடனும் சேவை மனப்பான்மையுடன் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் போக்குவரத்து பிரிவு காவலர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று (05.07.2022) தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வி.வி.டி சிக்னல் பகுதியில் மேற்படி சாலை பாதுகாப்பு படை மாணவர்கள் 6 பேர் ஆர்வத்துடன் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாணவர்களின் ஆர்வத்தினையும், சேவை மனப்பான்மையையும் பாராட்டி இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்ததோடு முக கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பணி செய்ய வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.


