ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 120 வருடங்கள் கழித்து தங்கம் கண்டுபிடிப்பு, தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை திருச்சி மண்டல தொல்லியல் துறை இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கடந்த 8 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் C சைட் என அழைக்கப்படும் இடத்தில் கடந்த 1902 ல் அலெக்சாண்டர் ரியா ஏற்கனவே அகழாய்வு செய்தார். இந்த இடத்தில் அவர். அந்த காலத்தில் இவ்விடத்தில் தங்கத்தினால் ஆன நெற்றி பட்டையம் கிடைத்தது. அதன் பின் பல்வேறு அகழாய்வு ஆதிச்சநல்லூர் நடந்தது. 2004 மற்றும் 2005 ல் இந்திய தொல்லியல் துறைசார்பில் டாக்டர் சத்திய மூர்த்தி தலைமையில் அகழாய்வு செய்தார். ஆனால் தங்கம் கிடைக்கவில்லை. கடந்த 2020-2021 ஆகிய காலங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் தலைமையில் அகழாய்வு நடந்தது. அப்போதும் தங்கம் கிடைக்கவில்லை. தற்போது அகழாய்வு இயக்குனர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு செய்து, கிடைத்த பொருளை அந்த இடத்திலேயே பத்திரப்படுத்தி உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருள்கள் கிடைத்து தொல்லியல் துறையினர் மற்றும் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் இதுவரை வெண்கலம் மற்றும் தங்கம் கிடைக்கவில்லை என்பது பெரும் குறையாக இருந்தது.
இதற்கிடையில் அலெக்ஸாண்டர் இரியா அகழாய்வு செய்த இடத்தில் 30 செண்டி மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட காதணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வின் அறிக்கையில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது ஆதிச்சநல்லூர் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த பொருள் சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரிகத்துடனும், தங்கம் உபயோகிக்கும் அளவுக்கும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையிலும் இருந்துள்ளான் என்பதை இந்த அகழாய்வில் கிடைத்த பொருட்கள் உணர்த்துகின்றன. இதனால் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் கூறுகையில், அலெகசாண்டர் இரியாக காலத்தில் தங்கத்திலான நெற்றி பட்டையம் கிடைத்தது. அதன் பிறகு பல முறை ஆய்வு நடந்தும் தங்கம் கிடைக்கவில்லை. தற்போது நாங்கள் செய்த ஆய்வில் தங்கத்திலான காதில் மாட்டும் காதணி கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்தின் தொன்மையையும் அவன் உலோக பொருள்களை பண்படுத்திய நிகழ்வுகளையும் உறுதி படுத்த முடிகிறது. இந்த தங்கத்தினை ஆய்வு செய்த போது 20 காரட் தங்கம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் செம்பு சேர்த்திருக்கிறார்கள் என முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் மேலும் இது குறித்து ஆய்வு நடைபெறும் என்று கூறினார்.

ஆதிச்சநல்லூர் தங்கம் கிடைத்தது என்ற செய்தி அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் ரமேஷ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர் அகழாய்வில் கிடைத்த தங்கம் குறித்து கேட்டறிந்தனர்.இயக்குனர் அருண்ராஜ் அவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அகழாய்வு செய்யும் இடத்தில் ஆய்வாளர் யத்தீஸ் குமார், பொறியாளர்கள் ராஜன், கலைச்செல்வன், ஆய்வு மாணவர்கள் அருண்குமார், குமரேசன், மணிகண்டன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


