ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மட்டும் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை என பல பிரிவுகளாக இந்த மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மாதத்தில் இருந்து 53 மாற்றுத் திறனாளிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உடன் இணைந்து ஸ்ரீவைகுண்டம் தாலுகா மாற்றுத்திறனாளிகளை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. தொடர்ந்து அவர்கள் கண்ட கோஷங்கள் எழுப்பி உள்ளே செல்ல முயன்றர். அப்போது ஸ்ரீவைகுண்டம் போலிசார் வட்டாட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை மூடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து காவல்துறையினர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரோடு வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், சமூக நல தாசில்தார் ரமேஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து நாளை மாவட்ட ஆட்சியர் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நல திட்ட தாசில்தார் ரமேஷ் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு மாற்றுத்திறனாளிகள் கலைந்து சென்றனர்.


