செய்துங்கநல்லூரில் நெடுஞ்சாலையில் பாலத்தின் பணியை கிடப்பில் போடப்பட்ட காரணத்தினால் கிறிஸ்தவ ஆலயத்தினை சூழ்ந்தது சாக்கடை. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதி படுகிறார்கள்.
திருச்செந்தூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரை தொழில்வழிச் சாலை பணிகள் கடந்த வருடம் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுமார் 635 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டது. இந்த சாலைப்பணியை பொறுத்தவரை செய்துங்கநல்லூரில் இருபுறமும் சாக்கடை கால்வாய்கள் அமைக்கப்பட்டு சாலையின் இடது புறம் திருச்செந்தூருக்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் செல்ல நடைபாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி மிகவும் மந்தமாக ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.
இந்த சாலை பணிகள் நடந்து வரும் நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சி.எஸ்.ஐ. ஆலயம் முன்பு பாலம் அமைப்பதற்காக சாலைப் பணிகள் கடந்த 6 மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாலத்தினை பாதி போட்டு விட்டு அப்படியே விட்டு விட்டனர். இதனால் சி.எஸ்.ஐ. கோயில் தெருவில் இருந்து வரும் சாக்கடை செல்ல வழியில்லாமல் பாலத்தில் தங்கியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பாலம் மூழ்கி சாக்கடை சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயம் வாசல் வரை வந்து விட்டது. இதனால் இந்த தெரு வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் வந்து செல்ல இயலவில்லை. இந்த பகுதியில் தான் மிகவும் பிரபலமான செய்துங்கநல்லூர் புதன் கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது.
இதனால் சாலையின் இருபுறமும் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சாலையில் இருந்து கிளம்பும் புழுதியால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் சாலையின் அருகே உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அருகே உள்ள சாக்கடையில் விழுந்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த இடத்தில் மின் கம்பம் மாற்ற தாமதப்படுவதால் பணி மந்தமாக நடைபெறுகிறது என்கின்றனர் நெடுஞ்சாலை துறையினர். ஆனால் கடந்த புதன் கிழமை அன்று சாலையில் மின்கம்பத்தினை நடுவதற்கு மின் தடை ஏற்படுத்தி கொடுத்தும் கூட இந்த பணியை நெடுஞ்சாலை துறையினர் செய்யவில்லை என்று மின்சார துறையினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மின்சார துறை, நெடுஞ்சாலை துறையின் போட்டியில் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக சேவகர் வியனரசு கூறும் போது செய்துங்கநல்லூர் மக்களை வாட்டி வதைக்கும் செய்துங்கநல்லூரில் பாதியில் விட்டு, 6 மாத நாள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் பாலத்தின் பணியை, உடனே நெடுஞ்சாலை துறையினர் பணியை தொடரவேண்டும் என்றால் விரைவில் செய்துங்கநல்லூரில் காத்திருப்பு பேராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார்.
நெடுஞ்சாலை துறையினர் , பாலத்தின் பணியை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
&&&


