தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கருங்குளம் அருகே உள்ள அரசர்குளம் வல்லகுளத்தில் புதிதாக கல்குவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் வல்லகுளம் அரசர்குளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
எங்கள் ஊரில் புதியதாக துவங்கிய கல்குவாரி எங்கள் குடியிருப்பு வீடுகளில் இருந்து 200மீட்டர் தொலைவிலும், விவசாய நிலங்களில் இருந்து 100மீட்டர் தொலைவிலும், சாலையிலிருந்து 50 மீட்டர் மக்கள் அதிகமாக செல்லும் தொலைவிலும், மேலும் போக்குவரத்து எங்கள் கல்லறைத்தோட்டத்திற்கு மிக மிக அருகிலும் ஆபத்தாக அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் வெடி வைக்கும் போது வீடுகள் அனைத்தும் அதிகமாக அதிர்வுகள் ஏற்பட்டு மிகவும் விரிசல் அடைகிறது. மேலும் வெடி வைக்கும் போது பயங்கரமாக கற்கள் சிதறி அருகிலுள்ள மக்கள் செல்லும் விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் விழுகின்றன. இதனால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் எங்கள் முழு கிராமமும் அழியும் நிலையில் உள்ளது. எனவே உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் முன்னெச்சரிக்கையாக தடுக்க உடனடியாக கல்குவாரியை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். மேலும் எங்கள் ஊர் சார்பாக மூன்று மனுக்கள் தங்களிடமே சமர்ப்பித்துள்ளோம். அந்த மனுக்கள் மீது இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மனு மீதும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லையெனில் அடுத்த கட்டமாக ஊர்மக்கள் திரண்டு இந்த பிரச்சனையை முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லும் வரை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


