இரண்டு வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கவில்லை. இதனால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. கடந்த வருடத்திலும் கூட சரிவர பள்ளிக்கு சொல்லாமல் குழந்தைகள் தவித்து வந்தனர். இதனால் பெற்றோர்களும் வருத்தத்துடன் இருந்து வந்தனர். இந்த வருடம் கொரோனோ நோய் கட்டுபாட்டுக்குள் வந்த காரணத்தினால் பள்ளிகள் அனைத்தும் திறந்து சீராக இயங்கி வருகிறது. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாரான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக செல்லவேண்டும் என்பதற்காக தனியார் ஆட்டோவை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதுபோல குழந்தைகளை அழைத்து சென்ற ஆட்டோ ஒன்று செய்துங்கநல்லூர் அருகே விபத்துக்குள்ளாகி எல்.கே.ஜி மாணவன் பலியானார். 7 மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இது பற்றிய செய்தி குறிப்பு வருமாறு.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் அருகே நாட்டார்குளத்தை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமான ஆட்டோவை பள்ளி குழந்தைகளை ஏற்றி பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து செல்வார். இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போலவே முத்தாலங்குறிச்சி, ஊத்துபாறை பகுதியில் இருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ சென்றது. இந்த ஆட்டோவை நாட்டார்குளத்தினை சேர்ந்த அந்தோணி மகன் ராஜி என்பவர் ஓட்டி வந்தார்.
இவர் வழக்கம் போல முத்தாலங்குறிச்சி, ஊத்துப்பாறை, வசவப்பபுரத்தைச் சேர்ந்த 8 மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு அனவரதநல்லூர் தென்னம்பாண்டி சாஸ்தா கோயில் அருகே சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இதில் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் என்ற நான்கரை வயது மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த ஆட்டோவில் வந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லத்தம்பி மகன் இசக்கிராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகிய 7 பேரும் காயமடைந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடனே இதுகுறித்து முறப்பநாடு போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

முதல் நாள் பள்ளிக்கு சென்ற மாணவன்.
பாளை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஊத்துபாறையை சேர்ந்த மாணவன் ராஜா மகன் செல்வநவீன் முதல் நாள் இன்று தான் பள்ளிக்கு செல்கிறார். முதல் நாளே விபத்தில் சிக்கி பலியான காரணத்தினால் உறவினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. விபத்தில் மாணவ மாணவிகள் சிக்கியதை கேள்விபட்ட உறவினர்கள் அனவரதநல்லூர் சாலையில் கூடியதால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போனால் ஏற்பட்ட விபத்தா?
ஆட்டோவில் மொத்தம் 8 குழந்தைகள் தான் இருந்தனர். பெரிய அளவில் நெருக்கடி இல்லை. ஆட்டோ அளவுக்கு அதிகமான வேகத்தில் சென்ற காரணத்தினால் தான் நடுரோட்டில் பல்டி அடித்துள்ளது. இதற்கு காரணம் செல்போனை பேசிக்கொண்டே ஆட்டோவை டிரைவர் ஓட்டியதாகவும், திடீரென செல்போன் காதில் இருந்து தடுமாறி கீழே விழுந்த காரணத்தினால் செல்போனை பிடிக்கும் போது தடுமாறி விபத்து ஏற்பட்டதாகவும் போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


