தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி வரை நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2008 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நான்கு வழிச்சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்லும் கனரக வாகனங்களும், பெரிய பெரிய கம்பெனிகளுக்குச் செல்லும் வாகனங்களும், விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. இதில் அருகே உள்ள வல்லநாடு தாமிரபரணி ஆற்றில் குறுக்கே மிக பிரம்மாண்டமான பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆரம்பம் முதலில் பாலம் முறையான கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்த நிலையில் பாலத்தில் தற்போது வரை 6 முறை விரிசல் ஏற்பட்டு சேதம் அடைத்துள்ளது. இதனால் போக்குவரத்து பாலத்தின் ஒரு வழியாக மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. பாலத்தை முறையாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் இதே போல் மீண்டும் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. ஒரு வார காலத்திற்கு பின்னர் இந்த விரிசல் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
இதற்கிடையில் தூத்துக்குடி எம்பி கனிமொழி மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு பாலத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 29ம் தேதி பாலத்தை சரி செய்வதற்கான டெண்டர் வெளியீடபட்டுள்ளது. அதில் வல்லநாடு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்ய 21 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 180 நாட்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று மீண்டும் ஒருவழிப்பாதையாக இயக்கப்பட்ட வந்த சாலையில் பாலத்தின் நடுவே விரிசல் ஏற்பட்டள்ளது. இதனை அறிந்த போலிசார் பாலத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தை தடுப்புவேலி கொண்டு அடைத்துள்ளனர். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே டெண்டர் விடப்பட்ட இந்த பாலத்தின் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


