தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வஉசி மைதானத்தில் பிரதமர் மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்திராங்கதன் உட்பட பலர் இந்த கலந்து கொண்டனர்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய நயினார் நாகேந்திரன், விவசாய மக்களுக்கும், விவசாயத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கும் வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கியது மத்திய அரசு. அதனை மூன்று தவணையாக கொடுக்கப்பட்டது. மொத்தம் தமிழகத்தில் மட்டும் 60 லட்சம் பேர் இதனால் பயன் பெற்றனர். நாடு முழுவதும் 80 கோடி பேர் இதனால் பயன் பெற்றனர். ஜெயலலிதா இருக்கும் போது அற்புதமான ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. தேனி மாவட்டங்களில் பெண் சிசுக் கொலை அதிகரித்துக் காணப்பட்ட சமயத்தில் அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி கர்ப்பிணிப் பெண்களுக்கு மாதம் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்து நாடு முழுவதும் 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அன்று மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தது அண்ணா இன்று மறுமலர்ச்சியை கொண்டு வந்தது அண்ணாமலை. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி எந்த மாநிலத்தில் ஆட்சி செய்கிறததோ அங்கு ஊழல் இல்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு வருடத்தில் ஊழல் தலை தூக்கியுள்ளது. மத்திய அரசு ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அத்தனை திட்டங்களையும் சொல்லி முடியாது. ஆனால் எல்லாத் திட்டங்களையும் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் என்றால் அதில் முதல்வர் ஸ்டாலின் படம் தான் உள்ளது. இன்று தமிழகத்தை பொருத்த மட்டிலும் 60 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது அந்த பணங்கள் அனைத்தும் மத்திய அரசின் பணம். அதில் மாநில அரசுக்கு பங்கு இருக்கிறது. பொதுவாக எந்தத் திட்டம் எடுத்துக் கொண்டாலும் மத்திய அரசு நேரடியாக செய்ய முடியாது. மாநில அரசு மூலமாகத்தான் அதனை செய்ய முடியும். ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் மக்கள் மனதில் வந்திருப்பது மனமாற்றம் அந்த மனமாற்றத்திற்கு காரணம் ஆட்சி மாற்றம். இந்த ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,
வேதாந்தா நிறுவனம் ஒரு தனியார் கம்பெனி. இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். அதன் காரணமாகவே இந்த நிறுவனம் மூடப்பட்டது. கம்பெனியை விற்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் ஸ்டெர்லைட் எதிராக மக்களை தூண்டியது. அதில் தான் 9 அப்பாவிகள் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்கள். தெரிந்தும் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று கனிமொழி கூறுவது மக்களை ஏமாற்றுவதாக அர்த்தம். தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. மக்களின் துணையோடு நான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தாமிரபரணி நதியை பல்வேறு கட்டங்களில் தூய்மை செய்துள்ளேன். தாமிரபரணி நதியை தூய்மைப்படுத்த மத்திய அரசு மூலமாகவோ வேறு எந்த திட்டம் மூலமாகவும் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை தமிழக அரசு சார்பில் மத்திய அரசை சந்திக்க டெல்லி செல்ல உள்ளார்கள். அதில் நானும் செல்கிறேன். நதியைத் தூய்மைப்படுத்த அங்கு நான் வலியுறுத்துவேன். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக புரட்சி வெடிக்கும் என்று தொல் திருமாவளவன் கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர், தொல் திருமாவளவன் எது கூறினாலும் புரட்சி வெடிக்கும் என்று தான் கூறி வருகிறார். அக்னிபாத் திட்டம் மக்களுக்கு தேவையான திட்டம். இந்திய இராணுவம் வலிமையாக இருப்பதற்காகவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுக இரட்டை தலைமை ஒற்றைத் தலைமை கருத்து அவர்களின் விருப்பம் என அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


