சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் 10¾ பவுன் செயினை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பெருமாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜகுமாரன். இவரது மனைவி ஜெயந்தி (45) நேற்று மாலை அதே தெருவில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெயந்தி கழுத்தில் அணிந்திருந்த 10¾ பவுன் தாலி செயினை மர்ம நபர் திடீரென பறித்துக் கொண்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து அங்கிருந்த பெண்கள் அனைவரும் அந்த நபரை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து மரத்தில் கட்டி வைத்தனர்.
பின்பு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் நகை பறித்தவர் பெருமாள்புரம் மேற்கு தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் செல்வம் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


