108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவத்திருப்பதி ஸ்தலங்களில் 9வது ஸ்தலமாக விளங்குகிறது ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவில்.
இத்திருக்கோவிலில் சுவாமி நம்மாழ்வார் திருஅவதாரம் செய்த வைகாசி மாதம் விசாக திருநட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் 10 நாட்கள் பிரமோட்சவ விழா நடைபெறும். அதே போல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா காலங்களில் தினமும் காலை, மாலை நம்மாழ்வார் திருவீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5ம் நாளான கடந்த 7 ஆம் தேதி காலை மங்களாசாசனம் மற்றும் இரவு 9 பெருமாள்களின் கருடசேவை நடந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்வான 9ஆம் திருநாளன இன்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக சுவாமி நம்மாழ்வார் காலை 7.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளினார். திருத்தேர் காலை 8.30 மணிக்கு பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரானது, மேல ரதவீதியில் புறப்பட்டு வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதி வந்து பின்னர் தெற்கு ரதவீதி வந்து மேல ரதவீதியில் உள்ள நிலையத்திற்கு திருத்தேர் வந்தடைந்தது.

கோவிந்தா கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் திருத்தேரை இழுத்தனர். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித், முன்னாள் அரங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 10 ஆம் திருநாளான நாளை தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறும்.


