தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநாட்டவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், புயல், சூறாவளி, பூகம்பம், மண்ணரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும், உலக சூழல்தினத்தினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதன் படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை, தீவு பகுதிகளிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால்கரை பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும், அரசு, தனியார் பள்ளி, கல்லூரி வளாகங்களிலும் மரக்கன்று நடும் பணி துவங்கியது. கருங்குளம் ஒன்றியத்துக்குப்பட்ட பகுதியில் 6 ஆயிரம் மரக்கன்று நடவேண்டும் என திட்டமிட பட்டது.
இதன் துவக்கவிழா கருங்குளம் ஒன்றியம் விட்டிலாபுரம் ஜோஸ் மெட்ரிக பள்ளியில் வைத்து நடந்தது. கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெயபதி தலைமை வகித்தார். கருங்குளம் ஒன்றிய ஆணயாளர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கிய லீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிமுதல்வர் ஜெய்தூன் பீவி வரவேற்றார். கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் மரக்கன்றுகளை நட்டு மரம் நடும் பணியை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாகிகள் ஓ.பி. முஸ்தபா, ரகுமத், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பஞ்சாயத்து எழுத்தர் இசக்கி முத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்து அலுவலங்கள், கிராம நிர்வாக அதிகாரி அலுவலக வளாகம், தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளில் மரம் நடும் பணி நடந்தது. தொடர்ந்து மாணவர்களை மரம் நடும் பணியில் ஊக்கு விக்கும் விதமாக பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு மரங்களை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


