மும்பையில் இருந்து வெளிவரும் வணக்கம் மும்பை வார இதழில் நான் எழுதும் நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் -2 பகுதி – 186 ல் தாமிரபரணி கரை பற்றி எழுதியுள்ளேன். – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
கதரும் உப்பும் காந்தியடிகளின் இரு கண்களாகப் பாவிக்கப்பட்டன. ஓங்கி உலகறிந்த உத்தமர் காந்தியாகப் புகழ் பெற இவை இரண்டுமே அவருக்குத் துணை புரிந்தன என்பதில் எள்ளளவும் சந்தேக மில்லை. காந்தியின் கொள்கைப்படி கதர் என்றால் முழுச் சுதேசி மனோபாவம். மக்களின் இன்றியமை யாத் தேவைகளை நிறைவு செய்ய – அதிலும் கிராமவாசிகளின் உழைப்பின் மூலமும், புத்திக் கூர்மையின் மூலமும் நிறைவு செய்ய வேண்டுமென்ற உறுதியின் சின்னமாகும். கதர் ஒரு சமூக ஒற்றுமையின் சின்னம் என்கிறார் காந்தி. அது இந்திய சுதந்திரத்தின் சீருடை என்கிறார் நேரு. ஏழை பணக்காரர் எனும் பாகுபாட்டை நீக்கி அனைவரும் ஒன்று என்னும் சகோதரத்துவத்துக்கு வழிகாட்டக் கூடியது கதர். ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி, மன்னர், குடிமக்கள் ஆகியோரிடையே பிரிக்க முடியாத ஒரு சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது இராட்டினத்தின் செய்தியாகும் என யங் இந்தியா பத்திரிக்கையில் (17.09.1925) எழுதியுள்ளார்.
கடையவனுக்கும் கடைத்தேற்றம் என்பதை தம் உள்ளக்கிடக்கையாகக் கொண்டிருப்பவர் காந்தி. சமவாய்ப் புக் கிடைக்கப்பெறும் மனிதன் சமமான ஆன்மிக வளர்ச்சி அடைவான். அதன் சின்னமாகத் தான் இராட்டை உள்ளது என்கிறார் அவர். இம்சையின் சின்னம் ஆயுதம் என்றால் அகிம்சையின் சின்னம் சர்க்கா. இது பொருளாதாரச் சுயதேவை நிறைவுக்குப் பயன்படுகிறது. வறுமையையும், சோம்பலையும் முறியடிக்கக் கூடியது.
பிறரிடம் மரியாதை, பயபக்தி ஏற்படுத்தும் அளவிற்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை எளிமையான தாக இருக்க வேண்டு மெனில் கதர் அணிவதை ஒரு நெறியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதுவே பிறருக்குத் தூண்டுகோலாகவும் அமைந்துவிடும். பருத்தியிலிருந்து நூல் நூற்பது சம்பந்தமான பல்வேறு பணிகைளையும் புத்திசாலித் தனமாகச் செய்வதில் ஒரு கல்விப்பணி அடங்கியிருப்பதாக காந்தி நினைத்தார். இராட்டைதான் நம் நாட்டில் நெடுங்காலமாய் ஏழைக் குடும்பங்களை வாழ்விக்கச் செய்துள்ளது. டாக்கா மஸ்லீன் வகைத் துணிகள் ஒரு காலத்தில் உலகப்புகழ் பெறக் காரணம் அதன் நேர்த்தியும். தொழில்நுட்பமும், தரமுமே ஆகும்.
இந்தியாவில் 1760க்கும் 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர் களது கல்வி, கலாசார வாழ்க்கை முறைகளான உணவு, உடை போன்ற பல நாகரிக மேம்பாட்டு முறைகளைத் தழுவி வாழும் நிலைக்கு மக்கள் தயார்படுத்தப்பட்டனர். கி.பி.1760 முதல் 1813 வரை இங்கிலாந்தில் நடைபெற்ற தொழிற்புரட்சியின் தாக்கம் இந்தியாவையும் பாதித்தது. விவசாயப் பொருளாதாரம் மிக்க நாடாக மாறியது. பொருள் உற்பத்தி அதிகரித்ததால், அவற்றை அங்காடிப் படுத்த அயல்நாடுகளை அரசியல் ஏகாதிபத்தியத்தின் மூலம் அடிமைப் படுத்திக் தமது விற்பைனைச் சரக்குக்குரிய காலணியாக்க ஆங்கிலேயர் முயன்றனர். ஆங்கிலேயரின் விற்பனைச் சரக்குகளில் ஜவுளி ஆலைத் தொழில் முதன்மை இடம் வகித்தது. ஒரு ரூபாய்க்கு பருத்தியை இந்தியாவி லிருந்து வாங்கிச் சென்று ஸ்காட்லாந்தின் மல் எனும் இடத்தில் உற்பத்தி செய்த துணிகளை 16 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதனால் இந்திய மரபு சார்ந்த நெசவுத்தறி நெய்தலில் தொய்வு ஏற்பட்டது. வெளிநாட்டுத்துணி வகைகளை வாங்கும் கட்டாய நிலைக்கு மக்கள் உள்ளாயினர். நெசவு சார்ந்த கைத்தறி மற்றும் குடிசைத் தொழில்கள் நசிவடைய ஆரம்பித்தன. இங்கிலாந்தின் லங்காசியர் பகுதியே நமது பருத்தி சார்ந்த தொழிலின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் செல்வாக்குப் பெற்ற தலமாக இருந்தது. காந்தியடிகளின் கதர் இயக்க வேள்வி இதன் காரணமாக எழுச்சியுற்றது. ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய மூல காரணத்தைப் (ஆணிவேரை) புரிந்துகொண்ட காந்தி அதனையே தனது போராட்ட ஆயுதமாக மாற்றி, அதன் மூலம் அந்நிய சக்தியை இம்மண்ணிலிருந்து விரட்டியடிக்கக் கருதினார். விடுதலை வேட்கை எனும் யோக தர்மத்தில் மக்கள் முப்பதுகோடியின் சிந்தனை ஒன்றுபட்டு நிற்க கதரை ஒரு பிரச்சாரக் கருவியாக்கினர். சுற்றுப்புறச் சூழலுக்கும். சுயதேவைப் பூர்த்திக்கும் கதரே தலை சிறந்தது என நம்பினார். கைராட்டையே ஆயுதம். கதராடையே சோபிதம் எனக் கண்டார். உலக நாடுகள் யாவற்றிலும், நடைபெற்ற புரட்சி வேள்விக்குப் பின்பே ஆக்கப்பணிகள் ஆதவனைப் போல் தோன்றின. ஆனால் இந்தியாவில்தான் வேறு எந்தத் தலைவருக்கும் தோன்றாத தோயச் சிந்தனையாகக் கதர் உற்பத்தி என்னும் ஆக்கப்பூர்வமான. வாழ்க் கையின் மிக இன்றியமையாத சுயதேவையைப் பூர்த்தியாக்கும் தன்னிறைவுப் பணி அவரால் துவக்கி வைக்கப்பட்டது. கதரைக் கைக் கொள்பவன் சுதேசியத்தை அடைந்து விட்டதாகவே கருதப்படுவான்.
கதரைப் போலவே அடுத்து மிக முக்கியமானது உண்ணும் உணவு. உண்ணும் உணவிற்கு அடித்தளம் உப்பு. உப்பைப் பெறுவது ஒரு அடிப்படை உரிமையாகக் கருதப் பட்டது. உப்பிற்கு விதிக்கப்பட்ட நியதியற்ற கெடுபிடிகள். காந்தியடிகள் உப்புச் சத்தியாக்கிரகம் மேற்கொள் ளத் தூண்டியது. அதுவும் இந்தியாவின் தென்பகுதியில் தூத்துக்குடி, மரக்கானம் ன்ற இடங்களில் அதிகம் உப்பு உற்பத்தி செய்யும் சமூகத்தின் பெரும்பான்மை மக்களை உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுபடத் தூண்டியது.
இந்தியா விடுதலையடைந்து தன் சுயபலத்தில் நிற்கவேண்டுமானால் இராட்டையின் இசை ஒவ்வொரு இல்லத்திலும் ஒலிக்க வேண்டும் என்ற முடிவுக்கு 1908 ஆம் ஆண்டிலேயே வந்து விட்டேன் என்கிறார் காந்தி. ஒரு சுளைப் பருத்தியை நம்பி, நம்மால் ஏன் நிற்க இயலாது என வினவுகிறார். கதர் உடுப்பதை ஒரு பாக்கியமாகவும். கடமையாகவும் இந்தியா முழுவதும் அங்கீகரிப்பதைப் போல் வேறு எதுவும் இந்தியாவை ஐக்கியப்படுத்தவும். புத்துயிர் செய்யவும் முடியாது. வாயில்லாப் பாமர மக்களுடனான ஜீவ உறவை வெளிப்படுத்தும் உணர்வின் அடையாளமாகத் திகழக்கூடியது கதர்.
கதரைப் போன்று காந்தியடிகளின் சத்தியாக்கிரக வேள்விக்கு பயன்பட்ட இன்னொரு கருவி உப்பு. உப்பின் மீதிருந்த வரியை நீக்க காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகத்தை மேற்கொண்டார். எந்த உப்பைக் கொண்டு ஏழைகள் தங்கள் உயிர் பிழைக்க எண்ணுகிறார்களோ அந்த உப்பைத் தங்கள் இலாபத்துக்குரிய தொழிலாக்கி வளப்படுத்திக் கொள்ள ஆங்கிலேயர் விரும்பினர். சர்க்கரையின்றி ஒருவர் உயிர் வாழலாம். ஆனால் உப்பின்றிக் கஞ்சி குடிக்க முடியாது. கஞ்சிகுடிப்பதற்கிலார் அதன் காரணம் அறிகிலார் என்பார் மகாகவிபாரதி. குடிக்கும் கஞ்சிக்குப் போடும் உப்புக்கும் வரி கொடுப்பது என்பது அநியாயம் எனக்காட்டவே உப்புச் சத்தியாகிரகம் நடத்தினார். உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது நமது தமிழ்மொழி.
ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சில தீமைகளுக்குப் பரிகாரம் தேடவே 1930ல் சட்ட மறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார். சட்டத்தை மீற உப்புவரிச் சட்டத்தை ஒரு குறியாக வைத்துக் கொண்டார்.
பூரண சுயராஜ்யமே இந்தியாவின் அரசியல் லட்சியம் என்ற தீர்மானம் 1929ல் லாகூர் காங்கிரசில் நிறைவேறியது. சுதந்திரம் அளிக்காவிடில் சட்டமறுப்பை ஆரம்பிப்பது என்றும் அத்தீர்மானம் கூறியது.
சிலசமயம் உப்பு வரி உப்பின் மதிப்பைவிட 146 மடங்கு அதிகமானதாய் இருந்தது. அப்படிப்பட்ட வரியைச் செலுத்தாத உப்பை யாரும் உபயோகிக்க முடியாதபடி செய்வதற்காக அரசு அக்காலத்தில் உப்பை நாசம் செய்தது. “உப்புச் சட்ட நியதியை மூன்று வழிகளில் மீறலாம். உப்பை உற்பத்தி செய்ய வசதியிருக்கும் இடத்தில் அதைத் தயாரிப்பது ஒரு குற்றம். சட்ட விரோதமாகத் தயாரித்த உப்பை வைத்திருப்பதும் வாங்குவதும் குற்றம். கடற்கரையிலிருந்து இயற்கையான உப்பை எடுத்துக்கொண்டு போவதும். அதே போன்று சட்டத்தை மீறுவதாகும். இத்தகைய அரசின் ஏகபோக உரிமைச் சட்டத்தில் ஒன்றையோ எல்லாவற்றையுமோ நீங்கள் செய்யலாம்’’ என அறைகூவல் விடுத்தார் காந்தி.
1930 மார்ச் 12ஆம் தேதி காலை 6.30 மணிக்கு காந்தி தமது 78 சீடர்களுடன் சரித்திரப் புகழ்பெற்ற தண்டி உப்பு யாத்திரையைத் தொடர்ந்தார். ஏப்ரல் 6ஆம் தேதி காந்தி உப்புச் சட்டத்தை மீறியதும் நாடெங்கும் மக்கள் அச்சட்டத்தை மீற ஆரம்பித்து விட்டார்கள்.
குஜராத்தில் துவங்கிய வேள்வியின் தாக்கம் தூத்துக்குடி கடற்கரையிலும் பிரதிபலித்தது. தூத்துக்குடியின் 19 கிராமங்களைச் சேர்ந்த அளத்துப் பண்ணையார் என்கிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உப்பு உற்பத்தி செய்வதிலும், உப்பு அள்ளுவதிலும், உப்பளங்களில் காவலர்களாகவும். ஏவலர்களாகவும் பணிசெய்து வந்தனர். காந்தியின் அறை கூவலும். இவ்வட்டாரத் தலைவர்கள் பலரது வழிகாட்டலும் அளத்துப்பண்ணையார் சமூகத்தின் பெரும்பான்மையோரை உப்பு அறப்போரில் ஈடுபடத்தூண்டியது. தங்களின் வாழ்வாதாரத்தை வதைக்க நினைத்த அன்னிய ஆட்சியாளரை எதிர்த்துப் போரிடவும், திருச்செந்தூர். ஆறுமுகநேரி, குலசேகரப்பட்டினம், குரும்பூர் போன்ற பல்வேறு இடங்களைச் சேர்ந்த தலைவர்கள் இங்கு வரும்போது அவர்களை வரவேற்று உணவளித்து தங்கவைத்துப் பொருளுதவி புரிந்தும் தமது ஈடில்லா தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.
(நதி வற்றாமல் ஓடும்)


