தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கை தமிழர்களுக்கு அனுப்பப்பட உள்ள அரிசி பைகளை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பிள்ளைநகர் மன்னர் அய்யா கிட்டங்கியில் தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கை தமிழர்களுக்கு வ.உ.சி. துறைமுகம் வாயிலாக அனுப்பப்பட உள்ள அரிசியினை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நமது அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் துயரப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களான ரூ.80 கோடி மதிப்பிலான 40000 மெட்ரிக் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 மெட்ரிக் டன் பால் பவுடர் ஆகிய அத்யாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் சென்னையில் இருந்து 10000 மெட்ரிக் டன் அரிசி கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து வந்துகொண்டிருக்கும் 30000 மெட்ரிக் டன் அரிசியினை சேகரித்து 10 கிலோ பைகளாக பிரிக்கப்பட்டு 5 பைகளை ஒரு பண்டலாக பொட்டலம் செய்யப்படும் பணிகள் தூத்துக்குடி துறைமுகத்தின் அருகில் உள்ள 3 குடோன்களில் நடைபெற்று வருகிறது.
அரிசிகள் அனைத்தும் வரப்பபெற்ற பின் துறைமுக கப்பல் வாயிலாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் பால் பவுடர் மற்றும் மருந்தும் சேகரித்து அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தூத்துக்குடி மண்டல மேலாளர் முத்துலட்சுமி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மணிகண்டன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


