இத்தகைய பெருமைக்குரிய மேகநாதன் ஆழ்ந்து சிந்தித்து சூழ்ச்சிகள் செய்வதில் வல்லவர். பல இளைஞர்களைத் தூண்டி விட்டு பல போராட்டங்களை நடத்துவார். ஆனால் காவலர்கள் கையில் சிக்கமாட்டார். காவல் துறையினரோ உடன்குடியில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் மேகநாதன்தான் காரணம் என்பதை அறிந்து வைத்திருந்தனர். மேகநாதன் இளைஞர்களைத் தூண்டிவிட்டு கள்ளுக் கடைகளுக்குத் தீவைத்தல், தந்திக்கம்பங்களை அறுத்தெறிதல் போன்ற சட்ட விரோதமான
செயல்களைச் செய்வார். போலீசார் அவர் மீதும் மற்றும் அவருடைய தொண்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து மேகநாதனைக் கைது செய்யத் தேடுவர். ஆனால் மேகநாதன் தலைமறைவாகி விடுவார். இவ்வாறு மேகநாதனின் தலைமையில் உடன்குடியில் காங்கிரஸ் கட்சி நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொண்டிருந்தது. அச்சமயத்தில், 1942-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் நாள் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்திஜி ‘செய் அல்லது செத்துமடி’ என இந்தியர்களுக்கு ஒரு ஆணையையும், வெள்ளையனே வெளியேறு’ என வெள்ளையர்களுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார். காந்தியடிகள் ‘செய் அல்லது செத்துமடி” என்று கூறிய வார்த்தை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட மிதவாதிகளின் காதில் அறப்போராட்டங்களைச் ‘செய் அல்லது செத்து மடி’ என ஒலித்தது. தீவிரவாதிகளின் காதில் வெள்ளை அரசுக்குச் சேதம் விளைவிக்கும் செயல்களைச் ‘செய் அல்லது செத்துமடி’ என ஒலித்தது. இதனால் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கொதித்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் நாள் காந்தியடிகளும் அன்னை கஸ்தூரிபாய் அம்மையாரும், மற்றும் நாடெங்குமுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதானது. விடுதலைப் போராட்ட வீரர்கள் வன்முறையில் ஈடுபடலாயினர். காவல் நிலையங்களைச் சூறையாடுவது, அஞ்சல் நிலையங்கள் மற்றும் கள்ளுக்கடைகளைத் தீ வைத்துக் கொளுத்துவது. தகவல் தொடர்பு சாதனங்களை உடைத்தெறிவது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.
“காந்தியடிகளும், தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் தொண்டர்கள் போராட்டம் நடத்துகின்றனர்” என்ற செய்தி மேகநாதன் மற்றும் அவரது தொண்டர்களின் காதுகளுக்கு வந்தது. தாங்களும் வெள்ளை அரசுக்குச் சேதம் விளைவிக்க வேண்டும் என எண்ணினர். 1942-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ம் நாள் நள்ளிரவில் மேகநாதன் தலைமையில் வெள்ளாளன்விளை தேரியில் இரகசியக் கூட்டம் நடைபெற்றது. இந்த இரகசியக்கூட்டத்தில் மேகநாதனின் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அங்குக் கூடிய இளஞ்சிங்கங்களின் முன்னால் நின்று “காந்தியடிகள் செய் அல்லது செத்துமடி என ஆணை பிறப்பித்துள்ளார்; அந்த ஆணையை ஏற்று நாடு முழுவதுமுள்ள தொண்டர்கள் வெள்ளை அரசுக்குச் சேதம் விளைவித்து வருகின்றனர். நாமும் நமது பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.” என மேகநாதன் உணர்ச்சிப் பொங்க பேசினார்.
உடனே தொண்டர்கள் அனைவரும் “அண்ணாச்சி என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் ஆணையிடுங்கள்! நாங்கள் செய்கிறோம்” எனக் கேட்க, உடனே மேகநாதன் ‘திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வரையுள்ள தந்திக் கம்பங்களை உடைத்தெறியுங்கள்” எனக்கூறினார். அவ்வளவுதான் தாமதம் தொண்டர்கள் அனைவரும் திருச்செந்தூரை நோக்கி ஓடினர். ஓட்டமாக ஆலந்தலை வரைச் சென்று அங்கிருந்து குலசேகரன்பட்டினம் வரையுள்ள தந்திக்கம்பங்களை உடைத்தெறிந்து விட்டு பொழுது விடிவதற்குள் தலைமறைவாகி விட்டனர். மேகநாதன் குலசேகரன்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் இராமலிங்கம் பிள்ளை வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டார். இதனால் அவரையும் அவரது தொண்டர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடினர்.
(தொடரும்)


