புதியம்புத்தூர் பகுதியில் காவல்துறை சார்பு ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்த 120 பேருக்கு தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கும் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சார்பு ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்த 96 பேர் மற்றும் காவல்துறையில் துறை ரீதியான ஒதுக்கீட்டில் விண்ணபித்த 24 காவலர்கள் என மொத்தம் 120 பேருக்கு சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் அடங்கிய புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சியை உதவி ஆய்வாளர் முத்துராஜா, புதியம்புத்தூர் கனி மஹாலில் வைத்து ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையேற்று 120 பேருக்கு புத்தகம் வழங்கி வெற்றி பெற வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசும்போது “காவல்துறை பணி என்பது மிகவும் உன்னதமான பணியாகும். இதில் பொதுமக்களுக்கு நம்மால் ஏராளமான உதவிகள் செய்ய முடியும். நாம் நன்றாக பணியாற்றினால் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று அவர்களுக்கு உற்ற தோழனாக திகழ முடியும். சார்பு ஆய்வாளர் பதவிக்கான தேர்வுக்குரிய பாடதிட்டங்களின் அடிப்படையில் உள்ள இந்த புத்தகங்களை பயன்படுத்தி நீங்கள் அனைவரும் நன்றாக முழு முயற்சியோடு படித்தால் இந்த தேர்வில் வெற்றி பெற்று நீங்களும் சார்பு ஆய்வாளராக முடியும். நீங்கள் அனைவரும் வெற்றி பெறவேண்டும் என்று கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், உதவி ஆய்வாளர் முத்துராஜா உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


