தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் பகுதிகளில் பட்டா நிலத்தில் அனுமதியின்றி குறுமண் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் பல்வேறு செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு செங்கல்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் குறுமண் பட்டா இடங்களில் இருந்து வருவாய் துறையின் அனுமதி பெற்று எடுக்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் குறுமண் எடுக்க அனுமதி இல்லாமலும் அனுமதி பெற்ற இடங்களில் விதிமுறைகளை மீறி அதிக அளவில் பள்ளம் தோண்டியும் குறுமண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வப்போது பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சீரமைப்பதற்காக மட்டுமே அப்பகுதியில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கருங்குளம் பட்டா இடத்தில் குறுமண் அள்ள யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அனுமதியின்றி குறுமண் அள்ளினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


