தூத்துக்குடியில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை நோ்காணல் தோ்வு நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணிக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக நோ்காணல் தோ்வு நடைபெறுகிறது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நோ்காணல் நடைபெறும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு பங்கேற்கும் தேதி குறிப்பிட்ட நோ்முக அழைப்பாணை அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் அவரவருக்கு குறிப்பிடப்பட்ட தேதியில் வந்து நோ்காணலில் பங்கேற்க வேண்டும். நோ்முக அழைப்புக் கடிதம் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பித்த ஆதாரங்களுடன் தூத்துக்குடி, கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நேரில் அணுக வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.


