8. தியாகி எம்.எஸ். செல்வராஜன்
பாரத மக்கள் விடுதலை போரில் பெரும் பங்கு கொண்ட நாளில் திருச் செந்தூர் தாலூகா மக்கள் நடத்திய வீரமிக்க போராட்டங்களும் செய்த தியாகங்களும் குறிப்பிடத்தக்கதாகும். இந்திய மக்கள் கவனத்தை தாலூகா மீது திரும்பச் செய்தவர்கள் அன்றைய சுதந்திர போராட்ட வீரர்கள்.
ஆறுமுகநேரியை சேர்ந்த முன்னாள் எம்.பியும் தியாகியுமான கோசல்ராம், முன்னாள் எம்.எல்ஏவும் தியாகியுமான .செல்வராஜன் ஆகிய இருவருடைய திரு நாமத்தை தெரியாத தமிழக மக்கள் யாரும் இருக்க வாயப்பில்லை. கி.பி. 19-ம் நூற்றாண்டில் தோன்றிய அந்த இரு அவதார புருஷர்களும் சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டார்கள்.
ஆறுமுகநேரி உப்பு சத்தியாக்கிரக வழக்கு, குரும்பூர் ரயில் நிலைய வழக்கு, மெஞ்ஞானபுரம் தபால் நிலைய வழக்கு, குலசை கொலை வழக்கு – இப்படி பல வழக்குகள் திருச்செந்தூர் தாலூகா பெயரை வெளியில் தெரியச்செய்த தோடு சுதந்திரப் போராட்டத்தில் திருச் செந்தூர் தாலூகாவிற்கு அது “விடுதலை போராட்ட வரலாறாகவும் அமைந்தது என கூறலாம்.
நாடு விடுதலை பெற்றபின், சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்ட இத் தாலூகா தியாகிகள் பலர் வறுமையில் வாடியபோது, அவர்களுக்கு ஆங்காங்கே தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் வாழ வழிசெய்து உற்சாகப் படுத்தியவர்கள் கோசல்ராம் அவர்களும், செல்வராஜன் அவர்களும் என்பதை நம் தாலூகா மக்கள் என்றும் மறக்கமுடியாது.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட தியாகிகளுக்கு மாநில அரசும், மத்திய அரசும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசாங் கத்திடம் பல முறை வற்புறுத்திக் கூறி, வெற்றி கண்டவர்கள் அவர்கள். தியாகி களுக்கு மான்யம் கொடுக்க அரசு முன் வந்தபோது, இத் தாலூகாவில் உள்ள தியாகிகளுக்கு மான்யம் கிடைக்க அயராதுழைத்த தீரர்கள் இந்த “இரட்டையர்கள்”
தேசவிடுதலைக்கு பின் 1946, 1952 1962ம் வருஷங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வென்று, சட்ட மன்ற உறுப்பினராகவும் 1958ல் மேல் சபை உறுப்பினராகவும் சிறப்புடன் பணி யாற்றிய .கோசல்ராம் அவர்கள், இத்தாலூகா மக்களுக்கு செய்த சேவைகளை நாடறியும்.
1954, 1957, 1962ம் வருஷங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வென்று சட்டமன்ற உறுப்பினராகவும், தான் பிறந்த ஊரான ஆறுமுகநேரி ஊராட்சி மன்றத் தலைவராகவும், நெல்லை ஜில்லா போர்டு உறுப்பினராக இருமுறையும், ஜில்லாபோர்டு உபதலைவராகவும், சிறப் புடன் பணியாற்றிய செல்வராஜன் , மக்களுக்கு செய்த சேவைகளை மக்கள் நன்கு அறிவார்கள். இவரை பற்றி இவரின் மருமகள் சிவசங்கரி என்பரிடம் பேசினோம். அவர் ஆறுமுகனேரி பேரூராட்சியில் 2000 – 2005 வரை சேர்மன் ஆக இருந்துள்ளார். அவர் கூறும் போது, என்னுடைய மாமா எம். எஸ். செல்வராஜன் மிகப்பெரிய சுதந்திர போராட்ட தியாகி ஆவர். அவர் சுதந்திரப் போராட்டத்திற்காக ஈடுபட்டு சிறைச்சாலைக்கெல்லாம் சென்றுள்ளார். விடுதலை போராட்டத்திலும் நிறைய அடிப்பட்டுள்ளார். எனக்கு 1996 இல் திருமணம் நடந்தது. 1999 இல் மாமா இறந்து விட்டார்கள். 4 வருடங்கள் அவருடன் பயணித்துள்ளோம். மாமாவை பார்த்து பேச நிறையபேர் வருவார்கள். அவர்கள் பேசுவதை நான் கேட்ருக்கேன். ஆறுமுகநேரி சிவன் கோவில் முன்னாடி சந்தை ஒன்றுள்ளது. அதன் பக்கத்தில் உள்ள மைதானத்தில் தான் தியாகிகளை வெயிலில் முட்டி போட வைத்து வெள்ளைக்கார்கள் துன்புருத்துவார்களாம் . எனது மாமா எம்.எஸ். செல்வராஜ் பாரத் மாதாக்கி ஜெய், என்று சொல்லும் போதெல்லாம் திரும்ப திரும்ப அடிப்பார்களாம். ஆனாலும் அவர் அசர மாட்டாராம். ஆகவே அவர் மயங்கி விழும் வரை அடித்துக்கொண்டே இருப்பார்களாம். அவர்மயங்கிய பிறகே இங்கிருந்து ஆங்கிலேயர்கள் செல்வார்கள்.
அவர் எம்.எல்.ஏ. வாக இருந்த போது ஊருக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார். 1949 தூத்துக்குடி, திருநெல்வேலி இரண்டும் ஒரே மாவட்டமாக சேர்ந்து இருந்த போது ஜில்லா போர்டில் தலைவர் பொறுப்பில் இருந்துள்ளார். ஆறுமுகனேரி பேரூராட்சிக்கு தலைவராக இருந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை தனியாக பிரிப்பதற்கு முன், திருச்செந்தூர் தொகுதியில் 2 தடவை, சாத்தன்குளம் தொகுதியில் ஒரு தடவை என 3 தடவை எம்.எல்.ஏ. வாக ஜெயித்து மக்கள் பணியாற்றியுள்ளார்கள். ஆறுமுகனேரியில் ªப்ண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என பாடுபட்டு பெண்கள் பள்ளி வர பாடுபட்டு , அதை நிறைவேற்றியும் உள்ளார்கள். ஆறுமுகநேரியில் உப்பளம் கொண்டு வந்து, இங்குள்ள மக்களுக்கு வேலை தருவதற்காக உப்பள சங்கம் கொண்டு வந்தார். டி. சி.டபுள் யூ நிறுவனத்தை ஆறுமுகநேரியில் உருவாக்கினார்கள். உப்பு தொழிலை சார்ந்து அந்த நிறுவனம் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எம்.எல்.ஏ. வாக இருக்கும் போது சட்டமன்றத்தில் பேசி அதற்கு அனுமதி வாங்கி நிறுவனம் வர முக்கிய காரணமாக இருந்துள்ளார். இன்றைக்கு அதில் ஆயிரக்கணக்கான பேர் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளார்கள். காயல்பட்டினம் பள்ளி, போன்று நிறைய பள்ளிகள் இவர் காலத்தில்தான் உருவானது. ஆறுமுகநேரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பு போட கூடாது என்றும், ஆறுமுகநேரி சிவன் கோவிலுக்கு உள்ளே வர அந்த தாழ்த்த பட்ட மக்களுக்கு தடை இருந்த அந்த தடைகளையெல்லாம் உடைத்து எறிந்தவர் என் மாமா தான் . பிற்காலத்தில் அவர்களுக்காகவே ஒரு இடத்தை வாங்கி கொடுத்துள்ளார். அவர் நினைவாக அந்த இடத்தினை செல்வராஜா புரம் என மக்கள் அழைத்து வாழ்ந்து வருகிறார்கள். எங்கள் வீட்டில் ஒரு ராட்டை இருக்கிறது. 1996 இல் இருந்து இந்த இராட்டை எங்கள் வீட்டில் உள்ளது. அதில் நூல் போட்டு வைத்திருப்பார்கள். மகாத்மா காந்தி படமும் அங்கேயே இருக்கும். அதில் காந்தி சித்திரம் போல வரையப்பட்டிருக்கும். அதை வைத்து குழந்தைகள் ராட்டை சுற்றுவார்கள். தற்போது நாங்கள். அதை நியாபகார்த்தமாக வைத்துள்ளோம். என்று கூறினார்.
எம்.எஸ். செல்வராஜ் மகன் சண்முக வெங்கடேசன் எங்களிடம் பேசும் போது மேலும் பல தகவல்களை கூறினார்.
37 தியாகிகளை உள்ளடகிய ஊர்தான் ஆறுமுகனேரி. திருச்செந்தூர் தாலுகாவிலேயே பெருபகுதிகள் தியாகிகள் நிறைந்து இருப்பது இவ்வூரில் தான். அதிலேயும் என்னுடைய தந்தையார் தியாகி, எம். எஸ்.செல்வராஜன். என்னுடைய பெரியப்பா, எம். எஸ். நடராஜன், மற்றொரு பெரியப்பா எஸ். ஆர். நடராஜன். போன்றவர்கள் எங்கள் குடும்பத்தில் உள்ள தியாகிகள் . இவர்கள் எல்லோரும் சுதந்திரத்திற்காக போராட்டியுள்ளார்கள். மறைந்த தியாகிகள் கே. டி. கோசல்ராம், தாலுகா தந்தை என அழைக்கப்பட்ட த. தங்கவேல் நாடார், தூக்கு மேடை வரை சென்று உயிர் பிழைத்த காசிராஜன், இராஜகோபால் போன்ற பெரும் தலைவர்கள் தோன்றிய புகழ்மிக்க புண்ணிய பூமி ஆறுமுகனேரி. ஆறுமுகநேரி சந்தையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. அந்த காலகட்டத்திலே சுதந்திரத்திற்காக போராடிய அனைவரையும் இங்கே அழைத்து வந்து தான் வெள்ளைக்காரர்கள் தண்டனை கொடுக்கிற வழக்கம் உண்டு. எங்க அப்பாவை பொருத்தவரை சுடுமண்ணிலே முழங்கால் போட்டு அதிலே உப்பு பரத்தி முட்டி இட வைப்பதும், இரத்தம் சொட்ட சொட்ட அடித்து துன்புறுத்தினார்கள் வெள்ளையர்கள். அந்த நிலைமையிலும் “வந்தே மாதரம், பாரத் மாதா கே ஜெய் “என்று சொல்ல கூடிய அளவில் உணர்ச்சி போராட்டம் நடந்தது. என்றுஅவர் கூறினார்.
(தொடரும்)


