ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஏற்பாட்டில் அவரது தந்தை ஊர்வசி நினைவாக மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் திறப்பு விழா ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது.
இந்த தேர்வு மையத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் குத்துவிளக்கேற்றி மையத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பங்கேற்ற அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் நினைவு பரிசுகள் வழங்கினார்.
அதன்பின்னர் பயிற்சி மையத்தில் உள்ள மாணவிகளிடம் கனிமொழி எம்.பி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களில் இருந்து படிக்கும் ஐபிஎஸ், ஐஏஎஸ் தேர்வு எழுதி அரசு அதிகாரிகளாக வரும் மாணவ மாணவிகளுக்கும், கிராமங்களில் இருந்து ஐபிஎஸ், ஐஏஎஸ் எழுதி அரசு அதிகாரிகளாக வரும் மாணவ மாணவிகளுக்கும் இடையில் நான் மிகப்பெரிய வித்தியாசத்தை பார்த்துள்ளேன். கிராமத்தில் அடிமட்டத்தில் இருந்து அரசு அதிகாரிகளாக வருபவர்களால் மட்டுமே மக்களின் வலிகளையும், பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். அவர்களால் மட்டுமே அந்த பிரச்சனைகளை ஒரு மனித நேயத்தோடு, மனிதாபிமானத்தோடு அணுக முடியும். மொழி என்பது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஒரு பொருட்டாக இருக்க கூடாது. நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தமிழ் தான் அனைவருக்கும் அடிப்படை. அதை புரிந்து கொண்டு செயல்பட்டால் அனைவரும் வெற்றி பெறலாம். தேர்வுகளை நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு அணுக வேண்டும். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி அகாடமி அட்வைசர் மகாலிங்கம், ஓய்வு பெற்ற திட்ட இயக்குநர் விஜயகுமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஊர்வசி அகாடமி ஒருங்கிணைப்பாளர் ராஜ் திலக், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார்.


