வல்லநாடு சிவன் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. வல்லநாட்டில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ளது.பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் விதத்தில் கட்டிடக்கலை அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் 21, 22, 23 மற்றும் செப்டம்பர் மாதம் 21, 22, 23 தேதிகளில் இந்தக் கோவில் சுவாமி மற்றும் அம்பாள் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்து வருகிறது. இதன்படி நேற்று அதிகாலையில் வல்லநாடு மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கோவிலில் திரளாகக் கூடினர். பஞ்சாங்கக் கணிப்பின்படி சரியாகக் காலை 6 .19 மணிக்குக் கிழக்குச் செவ்வானம் தகதகக்க மெதுவாகமேல் எழும்பி வந்த சூரிய ஒளிக்கதிர்கள் அருள்மிகு ஆவுடை அம்பாள் மற்றும் அருள்மிகு திருமூலநாதர் மூலவர் மீது பட்டு ஒளி வீசியது.இந்த அற்புதக் காட்சியைக் கண்ட பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டனர். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளு க்குச் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் சண்முகசுந்தர பட் டர் மற்றும் திருமூலநாதர் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.


