176. நெல்லை புத்தக கண்காட்சியில் பொருநை அருங்காட்சியகம்
சென்னையில் தாமிரபரணி கரை நாகரிகம் சம்பந்தப்பட்ட கண்காட்சி வைத்த வகைக்கே நாம் கொண்டாடினோம். தற்போது நெல்லை புத்தக கண்காட்சியிலிலும் பொருநை நாகரிக அருங்காட்சியகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
17.03.2022 முதல் 11 நாள்கள் நடைபெறும் புத்தக கண்காட்சி புத்தகப் பிரியர்களுக்கு கொண்டாட்டம். இந்த புத்தக கண்காட்சி மிகச்சிறப்பாக துவங்கியது. நெல்லையில் புத்தகத்தில் விழா தொடக்கம், தொல்லியல் பிரியர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. ஏன் என்றால் இங்கு தொல்பொருள், வனத்துறை புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது.
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 5 வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா காலை 10 மணிக்கு துவங்கியது. திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. பெருமாள் வரவேற்றார். மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு தலைமை தாங்கினார். புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு, பேரூரையாற்றினர். நாடளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி ஆணை யாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் பாளையங்கோட்டை அப்துல் வகாப், நாங்குனேரி ரூபி மனோகரன், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஸ், பாபாசி தலைவர் வயிரவன், செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி நன்றி கூறினார்.
மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கத்திற்கு கோட்டாட்சியர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் துணைத்தலைவர் ரமேஷ்ராஜா வரவேற்றார். சூழலியாலாளர் நக்கீரன் சூழலியல் பார்வையில் பொருநை என்ற தலைப்பிலும், ஆவணப்பட இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன் ஆதிச்சநல்லூரும் பொருநை நாகரீகமும் என்ற தலைப்பிலும், நான் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு) பொருநை கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும் பேசினோம்.
முத்து சாமி நன்றி கூறினார்.
இங்கு பேசும் போது நான் தாமிரபரணி கடந்து வந்த பாதையை பட்டியலிட்டேன். இன்றும் வற்றாத ஜீவ தற்போது வற்றாமல் இருப்பதற்கு யார் காரணம் என பேசினேன். 19 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியில் மாவட்ட ஆட்சி தலைவராக பணி புரிந்த பக்கிள் துரை என்பவர் காட்டை அளிக்கவிடாமல் காப்பாற்றியுள்ளார்.இதனால் இந்த பகுதியில் உள்ள காடுகள் காக்கப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூரை சேர்ந்த பெரிய தனக்காரர்கள் , ஜமீன்தார்கள் ஆகியோரை எதிர்த்து வெளிநாட்டில் உள்ள கோர்டில் தடை உத்தரவு வாங்கி வைத்துள்ளார்.
ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் தேயிலை விளைந்தால் அது நல்ல சுவையாகவும் அதே வேளையில் செழிப்பாகவும் வளர்ந்தது. எனவே தான் தாமிரபரணி காடுகளை அழிக்க முன் வந்தனர். தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையில் உள்ள பூங்குளத்தில் இருந்து பாணத்தீர்த்தம் உள்ள இடம் வரை காட்டை அழிக்க திட்டமிட்டனர்.
அவர்களை தான் மாவட்ட ஆட்சித்தலைவர் பக்கிள் துரை தடுத்தார். அதே போலவே அதன் பின் வந்த தமிழக அரசின் வனத்துறையினர் வெங்கடேஷ், காஞ்சனா உள்பட பலரும் தடுத்தனர். தற்போது பொதிகை மலையில் தாமிரபரணி கரை மிகவும் அடர்ந்த காடாக காட்சியளிக்கிறது.
என பேசினேன். தாமிர பரணியை பற்றி பேசுவது எனக்கு பிடித்தமானது. எனவே ஆர்வமாக பேசினேன். ஆவலோடு கேட்டார்கள். இந் நாள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாளாகும்.
இந்த புத்தக கண் காட்சியில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டிருந்தது. இதை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
சென்னை புத்தக கண்காட்சியில் அமைந்திருந்தது போலவே பாளையங் கோட்டையிலும் பொருநை அருங்காட்சியகம் அமைந் திருந்தது. இதில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் கண்டெடுக் கப்பட்ட பொருள்கள் காட்சி படுத்தப்பட்டிருந்தது. புத்தக கண்காட்சிக்கு இது கூடுதல் பெருமை சேர்த்தது. தொல்பொருள் தோண்டி எடுக்கப்படும் இடத்தை தத்ரூபமாக வடிவமைத்து காட்சிப் படுத்தியிருந்தனர்.
(நதி வற்றாமல் ஓடும்)


