தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி தெற்கூரை சேர்ந்த பண்டாரம் மகன் மாரிமுத்து. இவர் அதே பகுதியில் உள்ள செங்கல்சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் திருநெல்வேலி சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே வந்து கொண்டிந்தார்.
அதே போல் கீழ நாட்டார்குளத்தை சேர்ந்த இசக்கியம்மன் கோயில் தெரு பூல்பாண்டி மகன் வினோத். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருநெல்வேலியில் இருந்து கீழே நாட்டார்குளத்துக்கு செல்லும்போது திடீரென இருவரின் இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வினோத் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிவந்திபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான மாரிமுத்து உடலை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இறந்த மாரிமுத்துவின் உடல் சுமார் 2 மணி நேரம் அதே இடத்தில் கிடந்ததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் தற்போது திருநெல்வேலி&திருச்செந்தூர் தொழில்வழிச்சாலை பணிகள் ஆங்காங்கே நடந்து வருவதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


