செய்துங்கநல்லூர் அருகே சாலை பணியின் போது விவசாயிகள் பயன்படுத்தும் பாசன மடையை மூடிய காரணத்தினால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள தூதுகுழி குளம் தாமிரபரணி ஆற்று நீர் மூலம் பாசனம் பெறும் குளம். மருதூர் மேலக்காலில் உள்ள இந்த பாசன குளத்தில் முதல்மடை கீழதூதுகுழி கிராமத்துக்கு அருகில் நெல்லை திருச்செந்தூர் மெயின்ரோட்டில் உள்ளது. இந்த பாசன மடை கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு தூர்ந்து போய்விட்டது. இதை திறக்க வேண்டும் என்று இவ்வூரை சேர்ந்த விவசாயி பச்சமால் பல முறை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றார். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை.
இதற்கிடையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூர் வரை தொழில் வழிச்சாலைக்கு சாலையை அகலபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின் போது மடை சீர் செய்யப்படும் என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். எனவே விவசாயிகள் அதை எதிர்பார்த்து காத்து இருந்தனர்
இதற்கிடையில் சாலை பணி செய்பவர்கள் மணலை லாரியில் அள்ளி வந்து இந்த மடையை அடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கீழதூதுகுழி பகுதி விவசாயிகள், மாவட்ட காங்கிரஸ் துணைதலைவர் நயினார் தலைமையில் சாலைக்கு வந்தனர். அவர்கள் லாரி டிரைவரிடம் இங்கு பாசனமடை கட்ட வேண்டும் எனவே மணல் கொட்டக்கூடாது என கண்டித்தனர். ஆனால் டிரைவர் இங்கு மடை கட்ட எந்த ஏற்பாடும் இல்லை. எனவே மணலை கொட்டி மூடப்போகிறோம் என்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் நயினார் தலைமையில் பச்சமால், தர்மலிங்கம், மாரியப்பன், சன்னியாசி, முருகன், ஆறுமுகம், சுப்பிரமணியன் உள்பட 100க்கு மேற்பட்ட விவசாயிகளும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேஷ், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மறியல் செய்தவர்களை கலைந்து செல்லும் படி வலியுறுத்தினர். மேலும் இவ்விடத்தில் மடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர். ஆனால் விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஒப்பந்தகாரர்களும் வந்து உறுதி அளித்த பிறகே மறியலை வாபஸ் செய்வோம் என்று கூற அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் உதவிபொறியாளர் நவீன்பிரபு, ஓப்பந்தகாரர் சார்பில் மேலாளர் ஆகியோர் வந்து இவ்விடத்தில் மடை உண்டு. நிச்சயம் கட்டி தருவோம் என உறுதி அளித்தனர். அதன்பின்பு மறியல் செய்த விவசாயிகள் கலைந்து சென்றனர். அதன்பின் ஜேசிபி இயந்திரம் மூலம் மடை உள்ள இடத்தினை தோண்டி எடுத்து அடையாளம் கண்டு, அவ்விடத்தில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சனையில் இருந்த தூதுகுழி குளம் முதல் மடை பிரச்சனை முடிவுக்கு வந்தது. இதனால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் நயினார் கூறும்போது, கடந்த 15 வருடங்களாக இந்த மடைக்காக போராடி வருகிறோம். இந்த மடை மூலம் பாசனம் பெறும் சுமார் 200 ஏக்கர் பாசனம் நிலம் பாழ்பட்டு கிடந்தது. தற்போது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் எங்கள் விவசாயிகள் மனம் குளிர்ந்துள்ளனர். இதற்காக ஏற்பாடு செய்த காவல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
மிக வேகமாக நடந்து வந்த கல்லிடைக்குறிச்சி – திருச்செந்தூர் தொழில் வழிச்சாலை மிக வேகமான நடந்தது. வி.எம். சத்திரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் திருநெல்வேலி எல்லை வரையில் மிக வேகமாக நடந்து வந்தது. ஆனால் செய்துங்கநல்லூர் ஊருக்கு சாலையை கிளறி போட்டு விட்டு சுமார் 15 நாள்கள் கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் வாகனம் செல்லும் போது ஏற்படும்புழுதி கடைக்குள்ளும் அருகில் உள்ள குடியிருப்புகளிலும் புகுந்து நோய் ஏற்படுத்தி வருகிறது. ஹோட்டல்களிலும் பேக்கரிகளிலும் புழுதி படலம் படர்ந்து விடுகிறது. அருகில் உள்ள வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் ஏற்படுகிறது. எனவே தொடர்ந்து இவ்விடத்தில் தார்சாலை அமைக்காவிடில் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கீழ தூதுகுழியில் விவசாயிகள் மறியல் செய்து இருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


