செய்துங்கநல்லூர் சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயமும் ஒன்று. இந்த கோவிலில் வருடம் தோறும் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 வருட காலமாக கொரோனா அச்சுறுத்தலால் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
தற்போது உள்ள சூழலில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்த காரத்தினால் தமிழக அரசு திருவிழாக்களை கட்டுப்பாடுகளுடன் நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக கொடிப்பட்டம் நேற்று இரவு ஊர்வலம் வந்தது. அதன்பின்னர் இன்று காலை கோவில் வளாகத்தில் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் பெருங்குளம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. இந்த கொடியேற்று விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழா நடைபெறும் 10 தினங்களும் காலையும் மாலையும் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா எழுந்தளும் நிகழ்ச்சியும், திருநடன தீபாராதனையும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரவையினர் செய்து வருகின்றனர்.


