தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருப்பணிசெட்டிகுளத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் வாழைகள் பயிரிட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் வழக்கமாக வாழைத்தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தோட்டத்தில் வித்தியாசமான கால்தடங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் அங்கு வந்து வித்தியாசமான தடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்ததில் இது முதலையின் கால்தடம் என்பதை உறுதி செய்தனர். பின்னர் தோட்டத்தின் வழியாக செல்லும் வாய்க்கால் எங்கு சென்றடையும் என்பதை பார்த்தனர். அப்போது அது ஆறுமுகம்மங்கலத்தில் உள்ள குளத்தில் போய் சேர்வதை அறிந்தனர்.
பின்னர் முதலை குளத்தில் கிடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதி ஏரல் வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குளத்தின் பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்து பொதுமக்கள் யாரும் குளத்தில் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினர் முதலையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


