வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு வார காலமாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து நேற்று இரவு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து தாமிரபரணி ஆற்றில் விடப்பட்டுள்ளது. இந்த நீர் இன்று காலை நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தடுப்பணையான மருதூர் அணைக்கட்டில் முதல் கட்டமாக 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தாமிரபரணி ஆற்றில் மருதூர் அணைக்கட்டில் ஆய்வு மேற்கொண்டார். அவர் மருதூர் அணைக்கட்டில் அணையை தாண்டி செல்லும் தண்ணீர் மற்றும் மேலக்கால், கீழக்கால் பகுதிகளில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்பட அதிகாரிகள் கட்சியினருடன் வந்திருந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி,
பாபநாசம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகின்ற காரணத்தினால் தாமிரபரணி ஆற்றில் நேற்றைய தினம் தண்ணீர் அதிகமாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்த வெள்ள நீர் புன்னக்காயல் வரை செல்லும். எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் நீராடவோ, விளையாடவோ மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் கரையோரம் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் போல் இந்த வெள்ளம் இல்லாமல் குறைவான அளவிலேயே தண்ணீர் வருகிறது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வருடம் தோறும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க மழைக்காலம் முடிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


