மக்கள் கோரிக்கையை ஏற்று பிரகாசபுரம் வழியாக முதல் முறையாக இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பிரகாசபுரத்தில் ஏராளமான மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்கள் திசையன்விளை, தட்டார்மடம், உடன்குடி, சாத்தான்குளம் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றால் அங்குள்ள விலக்கிலிருந்துதான் பேருந்து ஏறும் நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் பிரகாசபுரத்திற்கு நகரப் பேருந்து இயக்கிட வேண்டும் என வலியுறுத்தியதுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏவிடம் முறையிட்டனர்.
அதன்படி மக்கள் கோரிக்கையையேற்று திசையன்விளை பணிமனையிலிருந்து இடைச்சிவிளை, பிரகாசபுரம், மேலநடுவக்குறிச்சி. தட்டார்மடம், மணிநகர் வழியாக உன்குடிக்குச் செல்லும் அரசு நகர பேருந்து இயக்கப்பட்டது. இப் புதிய வழித்தட பேருந்தை ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்துக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவர் சபிதா, துணை பொதுமேலாளர் சசிக்குமார், தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஆ. பாலமுருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திசையன்விளை போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் பிரவீன் வரவேற்றார்.
பூச்சிக்காடு பங்குத்தந்தை வசந்தன் ஆரம்ப ஜெபம் நடத்தினார். முன்னதாக அங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஊர்வசி எஸ். அமிர்தராஜ் எம்எல்ஏ பார்வையிட்டார். இதில் எம்எல்ஏ, பேசுகையில், மக்கள் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக மு,க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களில் பேருந்து வசதி, குடிநீர் பிரச்சினை உள்ளது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் , மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரத் தயாராக உள்ளேன். ஆதலால் எதுவானாலும் மக்கள் என்னிடம் நேரடியாக முறையிடலாம் என்றார்.
இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் து. சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், வட்டாரத் தலைவர்கள் பார்த்தசாரதி. சக்திவேல்முருகன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வர்க்கீஸ், மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர் பசுபதி, ஊராட்சி திமுக செயலர் ராஜபாண்டி. ஊராட்சித் துணைத் தலைவர் சந்திரசேகர். வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாஸ்கர், வட்டார ஒபிசி தலைவர் சிவபாலன், கிராம கமிட்டித் தலைவர் தினேஷ், டிசிடியு மாவட்டத் தலைவர் சிவராஜ்மோகன், ஊடகபிரிவு சுந்தர்ராஜ், திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனிஷ், உடன்குடி வட்டார செயலர் லிங்கம், திசையன்விளை போக்குவரத்து பணிமனை இளநிலை பொறியாளர் சோமசுந்தரம், உச்சிமாகாளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் நன்றி கூறினார்.


