விளாத்திகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் லிப்டு கொடுத்த
புரோட்டா
மாஸ்டரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த வாலிபரை காவல்துறை கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கல்படை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (55). இவர் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டாராக வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்குத் திரும்பியுள்ளார்.
எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்த போது ஒருவர் அவரை வழிமறித்து சுப்பிரமணியபுரம் வரை செல்ல வேண்டும் என்று லிப்டு கேட்டுள்ளார். இரவு நேரம் என்பதால் இரக்கப்பட்டு முருகனும் லிப்டு கொடுத்துள்ளார். சுப்பிரமணியபுரம் வந்ததும் அந்த நபர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, முருகன் கழுத்தின் பின் பகுதியில் வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளார்.
மேலும் முருகன் பையில் வைத்திருந்த ரூ.350 மற்றும் உளவு பார்சலை பறித்துள்ளார். மேலும், மோட்டார் சைக்கிளையும் பறிக்க முயன்றபோது முருகன் தப்பி விட்டாராம். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல்துறை வழக்குப் பதிந்து கே.குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரமேஷ்குமார் (35) என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே வழிப்பறி மற்றும் அடிதடி என 5 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


