கொற்கையில் சைட் மியூசியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜிடம் தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. தொடர்ந்து 6 மாத காலமாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், சங்க இலக்கியத்தில் கூறப்படும் செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன், சங்கறுக்கும் தொழில்கூடம் இருந்ததற்கான அடையாளங்கள், வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் சான்றுகள் என ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் கொற்கையில் நடந்து வரும் தொல்லியல் அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டார். அவர் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் குழாய், செங்கல் கட்டுமான அமைப்பு, இரண்டடுக்கு கொள்கலன் இருந்த இடத்தினை பார்வையிட்டார். பின்னர் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டார். ஆய்வுகள் குறித்து தொல்லியல் அலுவலர் காளீஸ்வரன் விளக்கி கூறினார்.
எம்.எல்.ஏ அமிர்தராஜ் இடம் தொல்லியல் ஆர்வலர்கள் கொற்கை மற்றும் சிவகளையில் சைட் மியூசியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். குறிப்பாக 1966ல் நடந்த அகழாய்வு பொருள்கள் தற்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. எனவே ஆய்வு முடிந்து குழியை முடிவிட்டால் அகழாய்வு நடந்த இடம் எதுவுமே தெரியாது. எனவே வரலாற்று சிறப்பு மிக்க நகரம் இது என்பதை தலைமுறைக்கு உணர்த்த இவ்விடத்தில் சைட் மியூசியம் மிகவும் அவசியம் என விளக்கி கூறினர். இதுகுறித்து அவர் கூறும் போது, தற்போது தமிழக முதல்வர், தமிழக தொல்லியல்அமைச்சர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட தொல்லியல் களங்களான ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். எனவே இதற்கு முன்பு கொற்கையில் எடுக்கப்பட்ட பொருள்களை மீண்டும் இங்கு அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்வார்கள். மேலும் சிவகளை மற்றும் கொற்கையில் சைட் மியூசியம் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நிறைவேற்றி தருவார். என்றுஅவர் கூறினார்.
அவருடன் ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜன், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதாளர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உள்பட பலர் வந்தனர்.


