நெல்லை – திருச்செந்தூர் பயணியர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை!
நெல்லையில் இருந்து திருச்செந்தூர் பயணியர் ரயில் சேவையை மீண்டும் தொடங்கிட வேண்டும் என காமராஜர் ஆதித்தனார் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தலைவர் ஐஜின்குமார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் “திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு பயணியர்கள் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த பயணியர்கள் ரயில் சேவை கொரோனா பரவல் காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது நெல்லை – திருச்செந்தூர் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் உண்டாகி, உரிய இடத்துக்கு விரைவில் செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் நிறுத்தப்பட்டுள்ள பயணியர் சேவை ரயிலை இயக்கினால் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், குரும்பூர், திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பயனடைவர். ரயில் சேவை இல்லாத மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால் மக்கள் சேவையை கருத்தில் கொண்டு நெல்லை – திருச்செந்தர் பயணியர் சேவை ரயிலை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.


