ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு
இடம் தேர்வு
திருச்சி கண்காணிப்பாளர் தலைமையில் மீண்டும் குழு வருகை
ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்துக்கு இடம் தேர்வு செய்ய இரண்டாம் கட்டமாக மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையில் ஆதிச்சநல்லூருக்கு மீண்டும் குழு வந்தது.
ஆதிச்சநல்லூருக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழககு தீர்ப்பின் படி படிப்படியாக ஆதிச்சநல்லூரில் பணி மும்முரமாக நடந்துவருகிறது. 2020 மத்திய பட்ஜெட்டில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நிதி ஒதுக்கீடு செய்தார். மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் படி புதிதாக திருச்சியில் தொல்லியல் துறைக்கு மண்டல அலுவலகம் திறககப்பட்டது. அதற்கு முதல் கண்காணிப்பாளராக அருண்ராஜ் பதவி யேற்றார். அவர் பதவியேற்ற பிறகு ஆதிச்சநல்லூர் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டு வேலை நடைபெறுகிறது. இவர் கடந்த 11 ந்தேதி ஆதிச்சநல்லூர் வந்து புதிய உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்தார். அந்த இடங்களை ஆய்வுக்கு எடுத்துகொண்டனர். தொடர்ந்து மேலும் ஆய்வு செய்ய நேற்று 26 ந்தேதி மீண்டும் ஆதிச்சநல்லூருககு இவர் தலைமையில் குழு வந்தது. ஏற்கனவே தேர்வு செய்த இடங்களை பார்வையிட்டார். அதன் பின் 2004ல் அகழாய்வு நடந்த இடம், மற்றும் ஆதிச்சநல்லூரில் பாறை கிண்ணங்கள் உள்ள இடங்களை ஆய்வு செய்தார். அருங்காட்சியகம் அமையும் இடம் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபால கிருஷ்ணனோடு கலந்து ஆலோசித்தார்.
அதன் பின் ட்ரோவுன் காமரா மூலம் ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் தற்காலிகமாக மியூசியம் அமைக்கும் பணியை முடுக்கி விட்டார். அவருடன் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர்கள் எத்திஸ்குமார், முத்துக்குமார், மத்திய தொல்லியல் அதிகாரி அறவாழி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், பராமரிப்பு அலுவலர்கள் சங்கர், பாலகிருஷ்ணன், சிவகளை மாணிக்கம், ஆதிச்சநல்லூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்பட பலர் வந்திருந்தனர்.
மத்திய தொல்லியல் துறை தொடர்ந்து ஆதிச்சநல்லூருக்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிச்சநல்லூரை சுற்றி வேலி அமைக்கும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கியது. அந்த பணியை முழுவதும் முடிவடைய வில்லை. இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எனவே மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் வேலி அமைக்கும் இடத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து பணிகளை நடத்தவும், சிறு சிறு திருத்தங்கள் செய்யவும் , விரைவில் முழுமையான பணி முடிவடையவும் நடவடிக்கை எடுககப்படும் என அவர் பத்திரிக்கையாளர்களிடம் உறுதி அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில்
மாநில அரசு அகாழ்வு செய்ய அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நிதி யாண்டில் மாநில தொல்லியல் துறை அகழாய்வு செய்ய மூன்று இடங்களுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இதில் கொற்கை அருகே உள்ள அகரம், மாறமங்கலம், ஆறுமுகமங்கலம் ஆகிய இடங்களிலும், ஆதிச்சநல்லூரில் கால்வாய் மற்றும் புளியங்குளம் பகுதியிலும் ஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. சிவகளையில் சிவகளை செக்கடி, ஸ்ரீமூலக்கரை, பேட்மாநகரம், பேரூர் திரடு, வெள்ளி திரடு, பரக்கிராமபாண்டி, பொட்டல் கோட்டை திரடு, ஆவரங்காடு பகுதியில் அகழாய்வு செய்யவும் அனுமதி அளித்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்று படுகையில் அகழாய்வு செய்ய வேண்டிய தொல்லியல் இடங்களை ஆய்வு செய்யவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே இங்குகிடைக்கும் பொருள்கள் அனைத்தையும் புதிதாக ஆதிச்சநல்லூரில் துவங்க உள்ள உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்க ஏதுவாக இருக்கும்.


